உள்நாடு

சகல இன மக்களின் ஆசீர்வாதத்துடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்; பேருவளையில் அனுர குமார

நாட்டிலுள்ள சகல இன மக்களினதும் பூரண ஆசீர்வாதத்துடன் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சிங்கள மக்களது விருப்பு மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம் சமூகத்தினதும் கணிசமான வாக்குகள் தேவை. சகல மக்களினதும் நம்பிக்கையை வென்ற தேசிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்புகின்ற நீதியான,நேர்மையான ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.

பேருவளை சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள எம்.வை.எம்.அன்சார் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பேருவளை அரசியல் வரலாற்றில் பிரதேச முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் மகத்தான வரவேபளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கல் வர்த்தகர்கள் சமூகநல இயக்கங்களின் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் இக்கூட்டத்தில் பங்கு பற்றினர்.

அவர் மேலும் கூறியதாவது, “தேசிய மக்கள் சக்தி இன்று முழு நாட்டிலும் சக்தி பெற்று திகழ்கிறது. முஸ்லிம்களின் பூரண பங்களிப்பு எமக்கு தேவை.தேசிய மக்கள் சக்தி மூலம் நாட்டு மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க முஸ்லிம்களும் பங்காளிகளாக இணைய வேண்டும். பேருவளை முஸ்லிம்களின் பங்களிப்பானது முக்கியமானதாகும். மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.அதன் மூலம் புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்.எமது ஆட்சியில் இனவாதம் இருக்காது.சகல இன மக்களுக்கும் சட்டம் ஒன்றே.இதை நடைமுறைப்படுத்துவோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை பின் போட என்ன தான் சதி திட்டங்களை தீட்டினாலும் தேர்தல் நடந்தே தீரும். இன்னும் 75 நாட்களில் தேர்தல் நடக்கும்.இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றியீட்டும்.

நாம் எமது ஆட்சியில் வியாபார நடவடிக்கைகளுக்கான சிறந்த சூழலை உருவாக்குவோம்.சிறந்த அரச சேவையை மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம்.போதை ஒழிப்பு,பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாமல் செய்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவோம்.

மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த தேர்தல்களில் வாக்களித்தார்கள்.ஆனால் அரசாங்கங்கள் தவறான பாதையிலேயே சென்றது.இதனால் நாடு அதள பாதாளத்திற்கு வீழ்ந்தது.இனியும் மக்கள் தவறான பாதையை தெரிவு செய்யக் கூடாது.

நாட்டு மக்கள் கடந்த காலத்தில் நாட்டையும் மக்களையும் அழித்து திருடுபவர்களுக்கே வாக்களித்து ஆட்சியமைத்தனர்.இதனால் நாடு வீழ்ந்தது.ஆட்சியாளர்கள் முன்னேறினர். ராஜபக்ச குடும்பத்திடமே நாட்டின் முழு அதிகாரம் ஒரு காலத்தில் இருந்தது.இவர்கள் இனவாதத்தை முன்னிலை ப்படுத்தி அரசியல் செய்தார்கள்.இறுதியில் நாடு அதல பாதாளத்திற்கு சென்றது என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ,அல்-ஹாஜ் எம்.பிலால் முஹம்மத் ரம்ஸான்,முஹம்மத் மபாஸிம்,தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான அரூஸ் அஸாத் ஆகியோர் பேசினர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *