85 ஆவது வருட ஆசூராக் கந்தூரி எதிர் வரும் சனிக்கிழமை கஹட்டோவிட்ட ஆசூரா மன்ஸிலில்..!
கஹட்டோவிட்ட அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸா நடைபெற்று வரும் ஆசூரா மன்ஸிலில் தொடர்ந்தும் 85 ஆவது வருடமாகவும் ஆசூராக்கந்தூரி எதிர் வரும் 20/07/2024 சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
கடந்த 2/7/2024 ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை இரவு தவிர்த்து 11 நாட்கள் பல்வேறு பட்ட மௌலித்களையும்,புகழ்மாலைகளையும் கூட்டாக அழகான முறையில் ஓதி இறுதியில் நார்ஷாக்களும் வழங்கப்படுவது வழமையாகும்.
இந்த பதினொரு நாட்களிலும் ஸுப்ஹான மௌலித்,அஷ்ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் பெயரிலான மௌலித், அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் நாயகத்தின் பெயரிலான மௌலித்,ஸஹாபாக்கள் பெயரிலான மௌலித்கள்,ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரிலான மௌலித்,புகாரி இமாம்,ஷாபி இமாம்கள் பெயரிலான மௌலித், கஹட்டோவிட்டாவில் அடங்கப்பெற்றுள்ள அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் ரழியல்லாஹு அவர்களின் பெயரிலான மௌலித்,பத்ரு ஸஹாபாக்கள் பெயரிலான புகழ்மாலையாகிய பத்ரு பைத்து,பத்ரு மௌலித்,அஷ்ஷெய்கு முஸ்தபா நாயகம் அவர்கள் பெயரில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் இயற்றிய மௌலித்,பூகொடை குமாரிமுல்லையில் அடங்கப்பெற்றுள்ளவர்களின் பெயரிலான மௌலித் போன்ற ஏராளமான மௌலித்களை இத்தினங்களில் சிறப்பாக ஓதி வருவது சிறப்பம்சம் ஆகும்.
சகல மௌலித் ஓதலின் பின்னாலும் குறித்த வலிமார்கள் மற்றும் நல்லடியார்கள் பெயரில் ஸுறா யாஸீன் ஓதி ஹதியா செய்யப்படுவதோடு ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆலிம்களினதும் சுருக்கமான பயான் நிகழ்வும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முஹர்ரம் மாதத்தில் காணப்படும் சிறப்பு வாய்ந்த ஆசூராவுடைய நோன்பை கூட்டாக நோற்பதற்கான ஏற்பாடுகளை அன்று முதல் இன்று வரை அவ்வப்போது காணப்படும் மத்ரஸதுல் முஸ்பவிய்யாவின் ஆலிம்களாலும் மத்ரஸா நிர்வாகத்தினராலும் மேற்கொண்டு இந்த நோன்பை அனைவரும் பிடிக்க வாய்ப்பளித்து வருகின்றமை முக்கிய விடயமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் இரவும் ஆசூராவுடைய நோன்பை நோற்பதற்கான ஏற்பாடுகளை தற்போதை மத்ரஸா மற்றும் ஆசூரா மன்ஸில் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருப்பதோடு இந்த நிகழ்வின் தமாம் வைபவமான ஆசூராக்கந்தூரி எதிர் வரும் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை உரிய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ஹும் அப்துல் ஹபீழ் ஆலிம் அவர்களின் காலத்தில் அவரது தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வை அவரது மறைவுக்குப் பின்னர் மர்ஹூம் அப்துல் ஸமத் ஆலிம் அவர்களின் காலத்தில் சிறப்பாக நடாத்தி வரப்பட்டதோடு தற்போது இம்மஜ்லிஸ்கள் யாவும் அப்துல் பாரி ஆலிம் அவர்களின் தலைமையிலும் அவரது சகோதரர் இஸ்மாயில் ஆலிம் மற்றும் ஹபீழ் ஆலிம் குடும்பத்தினர்களின் பூரண ஒத்துழைப்புடனும் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட.