“என் இலட்சிய அணியான ரியல் மெட்ரிட்டுக்காக அனைத்தையும் கொடுப்பேன்.” – கெலியன் எம்பாப்பே
பிரான்ஸின் பி.எஸ்.ஜி கழகத்திலிருந்து ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தில் இணைந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கெலியன் எம்பாப்பேற்கு அவ்வணியின் ரசிகர்கள் 80 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.
ரியல் மெட்ரிட் அணியின் தலைவர் ஃலொரொந்தினோ பெரெஸ், தமது உரையில் எம்பாப்பே குறித்து மிகவும் பெருமையாகப் பேசினார். அதோடு, காணொலிகள், பல சிறப்பம்சங்களுடம் கெலியன் எம்பாப்பேவை அவர் அறிமுகம் செய்தார்.
எம்பாப்பேவை (வயது 25) ஒப்பந்தம் செய்வதற்கு பல ஆண்டுகாலமாக ரியல் மெட்ரிட் முயற்சித்து வந்தது. பி.எஸ்.ஜி அணியுடனான ஒப்பந்தம் முடியும் வரை அவ்வணி காத்திருந்தது. தற்போது எந்த ஒப்பந்த தொகையும் இல்லாமல் அவர், ரியல் மாட்ரிட் அணியின் 9ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணியவுள்ளார்.
ரியல் மெட்ரிட் அரங்கில் எம்பாப்பே நுழைவதை பார்த்த அவரது தாய், உலகின் தலைசிறந்த கால்பந்து அணியில் தமது மகன் இணைவதை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
“என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் அம்மா அழுவதை என்னால் பார்க்க முடிகிறது. இது எனக்கு நம்பமுடியாத நாள். நான் சிறுவயதில் இருந்தே இந்த நாளைப் பற்றி கனவு கண்டுள்ளேன். இன்று இங்கே நான் இருப்பது நிறைய அர்த்தங்கள் நிறைந்தது.” என்று எம்பாப்பே ஸ்பானிஷ் மொழியில் பேசினார், கூட்டம் தொடர்ந்து ஆரவாரத்துடன் அவரது பேச்சை இடைமறித்தது.
“இப்போது எனக்கு மற்றோரு கனவு இருக்கின்றது’. அதுதான் இந்த அணியின் வரலாற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். எனது இலட்சிய அணியாக ரியல் மாட்ரிட்டிற்காக நான் அனைத்தையும் கொடுப்பேன்.” என்றும் எம்பாப்பே உறுதியளித்துள்ளார்.
அதோடு “இன்று இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஒரு செய்தியை கூற விரும்புகிறேன். நான் ஒரு காலத்தில் உங்களை போல் தான் இருந்தேன். உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் உங்கள் கனவுகளை அடைவீர்கள்.” என்றும் கூறினார்.
பி.எஸ்.ஜி அணியில் எம்பாப்பே 7ஆம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடினார். ரியல் மெட்ரிட்டை பொறுத்தவரை அந்த எண்ணை வினிசியஸ் ஜூனியர் பயன்படுத்துகின்றார். பிரான்ஸ் அணிக்காக அவர் 10 எண் ஜெர்சியை பயன்படுத்துவார்.
மெட்ரிட்டில் லுகா மெட்ரிச் அந்த எண்ணை பயன்படுத்துகின்றார். இச்சூழ்நிலையில் ரியல் மாட்ரிட் அணியின் கோல் மன்னனாக விளங்கிய காரிம் பென்ஸிமா பயன்படுத்திய 9ஆம் எண் ஜெர்சி எம்பாப்பேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.