உள்நாடு

அக்குறணை அல் அஸ்ஹரில் ஏ.ஹோல் திட்ட அடிக்கல் நடும் விழா

அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ரூபா 50 இலட்சம் செலவில் மிகவும் பாரிய அளவில் மீள் நிர்மாணிக்கப்படவுள்ள ஏ. ஹோல் வேலைத் திட்டத்தின் ஆரம்பப் பணியை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
அக்குறணையில் முழுவதும் கல்வியில் துரிதமான மறுசீரமைப்பையும் மேம்பாட்டையும் செல்வந்தர்களுடைய வகிபாகத்துடன் மேற்கொண்டாலும் அத்தகைய வளங்களை அரசாங்கத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ளுகின்ற புதிய முறைமையினையும் வடிவத்தையும் புதிய அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்று அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவிப்பு.

அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 50 இலட்சம் ரூபா செலவில் மிகவும் பாரிய அளவில் மீள் நிர்மாணிக்கப்படவுள்ள ஏ. ஹோல் வேலைத்திட்டத்தின் ஆரம்பப் பணியை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அதிபர் எம். எப். எம். சிராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அவர்கள் உத்தியோகபூர்வமாக அடிக்கல்லை நாட்டி வைத்து விட்டு உரையாற்றும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இப் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் 45 கோடி ரூபா செலவில் மிகவும் பாரிய அளவில் ஏ ஹோல் திட்டத்தின் மூலம் மீள் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டிடத் தொகுதிக்கு சமீபத்தில் மரணம் எய்திய தனது தாயின் பெயரில் 50 இலட்சம் ரூபாவை தன் சொந்த நிதியில் இருந்து நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்குறணை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் சட்டத்தரணி அஸ்மி, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி சியாம், பாடசாலை அபிவிருத்திக்கு குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் , மாணவர்கள் எனப் பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது எம். ஜே. எம். பைஸல் அவர்களினால் இப்பாடசாலையில் நிலவும் பாரிய வகுப்பறைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சமூகத்தினால் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள ஏ. ஹோல் திட்டத்தின் கீழ் மிகவும் பாரிய அளவில் மீள் நிர்மாணக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டிடத் தொகுதி பற்றிய விளக்கம் முன்வைக்கப்பட்டன. அது பற்றிய துண்டுப் பிரசுர விநியோகமும் அஸ்ஹர் ரீம்ஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

 

இக்பால் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *