உள்நாடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு

மேல் மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேல்மாகாண சபையினால் 2024 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கற்றல்,கற்பித்தல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கும் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை(13) கொழும்பு-10, அல் ஹிதாயா கல்லூரியில் நடைபெற்றது.

மேல் மாகாண புத்திஜீவிகள் ஒன்றிய தலைவரும் முன்னாள் பரீட்சை ஆணையாளருமாகிய ஏ.எஸ்.மொஹமட் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேல் மாகாண சபையினால் 2024 ஆம் ஆண்டு மேல்மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 138 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கற்றல், கற்பித்தல் சம்பந்தமாக சிறப்பு தேர்ச்சி பெற்ற வளவாளர்களினால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

உயர் கல்விக்கான ஃபாத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றவூப் ஷெய்ன் 21 ம் நூற்றாண்டு ஆசிரியரின் வகிபாகம் எனும் தலைப்பில் விளக்கமளித்ததுடன் தனி ஆற்றல்களை இனம் காணலும் குழுக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதும் எனும் தலைப்பில் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் எம்.எஸ் மொகமட் சிபா விளக்கமளித்தார்.

முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொகமட் ஒரு ஆசிரியரின் அனுபவ பகிர்வு குறித்து உரையாற்றினார். ஆசிரியர்கள் பற்றி தொழில் அதிபர் எம்.எச்.எம் மாகிர் உரையாற்றினார்.

இவ்வைபத்தில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் கொழும்பு மாநகர மேயரும் முன்னாள் ஐக்கிய அரபு எமிரேட்சின் இலங்கைக்கான தூதுவருமான அல் ஹாஜ் ஹுஸைன் முஹம்மத் உரையாற்றியதுடன் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

தனிப்பட்ட திறன்கள் உறவுகள் எனும் தலைப்பில் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் றிசாட் புஹாரி உரையாற்றினார். அதிதிகளும் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற முக்கியஸ்தர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


(அஷ்ரப் ஏ சமட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *