நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்கும் நேர்மையான விஷயங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்; கடையநல்லூரில் ரவூப் ஹக்கீம் பேட்டி
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்கும் நேர்மையான விஷயங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம். அதேசமயம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மக்களின் மீது வரி சுமையை அரசு ஏற்றுவதை எதிர்க்கிறோம் என்று தமிழகத்தில் விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஃ ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு திங்கட்கிழமை வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அமெரிக்கா ,சீனா ,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போட்டிக்களமாக இலங்கை இருந்து வருகிறது. இலங்கை மற்ற நாடுகளை ராஜதந்திர ரீதியில் அணுகி வருகிறது. நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் மற்ற நாடுகளின் முதலீடு திட்டங்கள் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்கும் நேர்மையான விஷயங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம். அதேசமயம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மக்களின் மீது வரி சுமையை அரசு ஏற்றுவதை எதிர்க்கிறோம். மேலும் அரசு சிக்கன செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் வீண் விரயம் செய்து வருவதையும் எதிர்க்கிறோம்.
பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் செய்து வரும் விஷயங்களில் ஊழல் பெருமளவு உள்ளதை நாங்கள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் பொதுவெளியிலும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இலங்கையில் ஆளும் அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து விட்டோம் என்று கூறுவது முற்றிலும் உண்மை அல்ல.
இந்தியாவில் இலங்கை அகதிகள் நீண்ட காலமாக தங்கி இருந்து வருகின்றனர். அவர்களின் பிரச்னைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. அதே சமயம் அகதிகள் பிரச்னையில் தீர்வு காண இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயாராக உள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பு சாசனப்படி ஐந்து ஆண்டுகள் பூர்த்தி அடைந்து விட்டால் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் தேர்தலை தள்ளிப் போடுவதற்காக வேறு சிலரை பகடை காய்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இன்றைய ஜனாதிபதி. ஆனால் அது நிச்சயம் பலிக்காது.
மீன்பிடிப்பது தொடர்பாகவும், கடல் எல்லை பிரச்னை தொடர்பாகவும் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு மீனவர்களும் அமர்ந்து பேச வேண்டும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையும் தொடர்ந்து முயன்று வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை உணர முடிகிறது. வேட்பாளர்களும் தங்களின் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.
பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதியின் முஸ்லிம் துணை தலைவரும் தமிழக வக்பு வாரிய தலைவருமான எம் அப்துல் ரகுமான் தென்காசி மாவட்ட தலைவர் எம் அப்துல் அஜீஸ் மாவட்ட செயலாளர் எஸ் சையது பட்டாணி மாவட்ட பொருளாளர் பி ஏ செய்யது மசூது உட்பட ஏராளமான முஸ்லிம் லீக் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
(திருச்சி – எம். கே. ஷாகுல் ஹமீது)