விளையாட்டு

மார்டினஸின் கோல்டன் கோலின் மூலம் கோபா அமெரிக்கக் கிண்ணத்தை தனதாக்கியது ஆர்ஜென்டீனா

கோபா அமெரிக்க கிண்ணஉதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் கொலம்பிய அணிக்கு எதிராக மேலதீக நேரத்தின் இறுதி நிமிடத்தில் லாடரோ மார்டினஸ் பெற்றுக் கொடுத்த கோல்டன் கோலின் உதவியுடன் 1:0 என வெற்றி பெற்ற மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி சம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டித் தொடரான கோபா அமெரிக்க கிண்ணம் 1916ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் நடப்பாண்டின் தொடர் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. இதில் முதல் லீக் சுற்று ஆட்டத்தில் ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் 4 குழுக்கல் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் அடுத்த சுற்றான காலிறுதி போட்டிக்கு 8 அணிகள் தெரிவாகியிருந்தன. அதில் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஈக்வடோர் அணியை பெனால்ட்டி உதையில் வீழ்த்திய ஆர்ஜென்டீனா அரையிறுதிக்குள் நுழைந்தது. 2ஆது காலிறுதிப் போட்டியில் கனடா அணி வெனிசுவலாவை வெற்றி கொண்டு அரையிறுதியை உறுதிப் படுத்தியது. 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் பனாமாவை பந்தாடிய கொலம்பிய அணி அரையிறுதிக்குள் செல்ல 4ஆது காலிறுதி போட்டியில் உருகுவே அணி பலமிக்க பிரேஸிலை வெற்றி கொண்டு அரையிறுதியை உறுதி செய்தது.

இந்நிலையில் கடந்த புதன் இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் உலகச் சம்பியனான ஆர்ஜென்டீனா அணி கனடா அணியை எதிர்கொண்டது. இப் போட்டியில் 22ஆவது நிமிடத்தில் அல்வாரெசும், 51ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸியும் கோலினை உட்செலுத்திக் கொடுக்க 2:0 என இலகு வெற்றியைப் பதிவு செய்த ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் கொலம்பியா அணி பலமிக்க உருகுவே அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியின் 39ஆவது நிமிடத்தில் லெர்மா அடித்துக் கொடுத்த கோலினால் 1:0 என உருகுவே அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொலம்பியா அணி.

அதற்கமைய இலங்கை நேரப்படி இன்று காலை 6.45 மணிக்கு ஆரம்பித்த இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து இரு அணிகளினதும் கோல் கம்பங்களை சென்று வர முதல் பாதி கோல் இன்றி சமநிலை பெற்றது.

பின்னர் ஆரம்பித்த 2ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் இரு அணிகளினதும் தடுப்பு வீரர்களும் , கோல்காப்பாளர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த விறுவிறுப்பான 2ஆவது பாதியும் கோல்கள் இன்றி சமநிலையில் நிறைக்கு வந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மாணிக்க மேலதீக நிமிடங்கள் வழங்கப்பட முதல் 15 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போனது.

இதனால் மேலதீக நிமிடத்தின் இறுதிப் 15 நிமிடங்கள் ஆரம்பமாக இரு அணிகளும் மும்மூன்று வீரர்களை மாற்றம் செய்து பெனால்ட்டி உதைக்கு தம்மைத் தயார்படுத்திக் கொண்டது. இருப்பினும் ஆட்டத்தின் 112ஆது நிமிடத்தில் பந்துடன் எதிர்அணியின் பாதி பக்கத்தை முற்றுகையிட்ட ஆர்ஜன்டீனா வீரர்களில் செல்சோ பந்தை கம்பத்தின் இடப்புறமாக ஓடி வந்த லாடரோ மார்டினஸ் பந்தைப் பெற்று மிக வேகமாக பந்தை கம்பத்தின் வலப்புறமாக உள்ளனுப்ப கொலம்பிய கோல்காப்பாளர் முயற்சி செய்வதற்குள் பந்து கம்பத்தினுள் நுழைய அதுவே வெற்றி கோலாகவும் மாற்றமடைய விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா அணி 1:0 என வெற்றி பெற்று கோபா அமெரிக்க கிண்ணத்தை தனதாக்கி அசத்தியது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *