ஐரோப்பாவின் சம்பியன்களாக 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது ஸ்பெய்ன்
யூரோ கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பலமிக்க இங்கிலாந்து அணியை 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஸ்பெய்ன் அணி 4ஆவது முறையாகவும் ஐரோப்பாவின் சம்பியன் மகுடத்தை வெற்றி கொண்டு அசத்தியது.
1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெற்றுருகின்றது. இதில் ஐரோப்பாக் கண்டத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள் பங்கேற்றன. அந்தவவகைளில் நடப்பாண்டின் யூரோ கிண்ணத் தொடர் ஜேர்மனியில் இடம்பெற்றுவந்தது. இம்முறை இத் தொடரில் 24 அணிகள் பங்கேற்றிருக்க முதல் சுற்று லீக் ஆட்டத்திற்காக ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் 6 குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன.
அதிலிருந்து 2ஆவது விலகல் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றிருந்தன. பின்னர் 3ஆவது சுற்றான காலிறுதிப் போட்டிக்கு 8 அணிகள் தெரிவாகியிருந்தது. அதில் முதல் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. 2ஆது காலிறுதி ஆட்டத்தில் துருக்கியை வெற்றிகொண்டு அரையிறுதியை உறுதி செய்தது நெதர்லாந்து. பின்னர் இடம்பெற்ற 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்திய ஸ்பெய்ன் அணி அரையிறுதியில் கால்பதித்தது. அடுத்து இடம்பெற்ற 4ஆவதும் இறுதியுமான காலிறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியை வெற்றி கொண்ட பிரான்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது.
பின்னர் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் அணி, பிரான்ஸ் அணியை எதிர்த்தாடியது. இப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் ஆரம்ப நிமிடமான 9ஆவது நிமிடத்தில் கோலோ முவானியின் கோலினால் 1:0 என முன்னிலை பெற்றது. பின்னர் போட்டியின் 21ஆது நிமிடத்தில் லமினோ யமலின் பதில் கோலுடன் போட்டியை 1:1 என சமன் செய்தது ஸ்பெய்ன் அணி. பின்னர் 25ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் கோலின் உதவியுடன் முதல் பாதியை 2:1 என முன்னிலை பெற்றது ஸ்பெய்ன். பின்னர் தொடர்ந்த 2ஆவது பாதியில் இரு அணிகளும் கோல்களை உட்செலுத்தாமல் போக முழு நேர ஆட்டம் முடிவில் 2:1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஸ்பெய்ன் அணி.
அதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற 2ஆது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி சம பலமிக்க நெதர்லாந்து அணியை எதிர்தாடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் சி ஸிமோன்ஸ் கோலினை உள்ளனுப்பி நெதர்லாந்தை முன்னிலைப் படுத்தினார். பின்னர் 9ஆது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்க அதனை ஹரிக்கேன் கோலாக மாற்ற போட்டி 1:1 என சமநிலை பெற்றது.பின்னர் 2ஆவது பாதியில் இறுதி நிமிடமான 90ஆவது நிமிடத்தில் வாட்கின்ஸ் வெற்றி கோலை உள்ளனுப்ப 2:1 என வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
அதற்கமைய தீர்மானமிக்க இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஜேர்மனியின் ஒலிம்பியஸ்டேடன் பெர்லின் அரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியின் ஆரம்பம் முதல் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஆட்டம் நகர முதல் பாதி கோல் இன்றி சமநிலையில் முடிந்தது. பின்னர் ஆரம்பித்த 2ஆவது பாதி ஆட்டத்தில் ஆரம்ப நிமிடமான 47ஆவது நிமிடத்தில் யமல் கொடுத்த அற்புதமான பந்துக் கடத்தலினை நிகோ வில்லியம்ஸ் பெற்று கோலாக மாற்ற 1:0 என முன்னிலை பெற்றது ஸ்பெய்ன்.
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் 73ஆவது நிமிடத்தில் பெல்லிங்கம் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை கோல் பாமர் கோலாக மாற்ற ஸ்பெய்னுக்கு பதிலடி கொடுத்து ஆட்டத்தை 1:1 என சமன் செய்தது இங்கிலாந்து. பின்னர் போட்டி உச்சகட்ட விறுவிறுப்பைக் கொடுக்க இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்ட இறுதி கட்ட நிமிடமான 86ஆவது நிமிடத்தில் வைத்து குக்குரைலா வழங்கிய பந்தை இங்கிலாந்தின் கோல் கம்பத்தினுள் உள்ளனுப்பி மிகோல் ஒயர்சபால் போட்டியின் முடிவை ஸ்பெய்ன் அணிக்கு சாதகமாக 2:1 என மாற்ற யூரோ கிண்ணத்தை 4ஆவது முறையாகவும் வெற்றி கொண்டு ஐரோப்பாவின் சம்பியன்களாக மகுடம் சூடியது ஸ்பெய்ன் அணி.
(அரபாத் பஹர்தீன்)