நிகவெரட்டிய, சங்கட்டிக்குளம் பிரதேசத்தின் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் நேரில் ஆய்வு..!
குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, சங்கட்டிக்குளம் பிரதேசத்தின் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
சங்கட்டிக்குளம் பள்ளிவாசலில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலை ஆளுனரின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சங்கட்டிக்குளம் பிரதேசத்தின் கல்வி,போக்குவரத்து, மகளிர் மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வடமேல் மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் அந்தந்தப் பிரதேச வளங்களை உச்சபட்சமாக பயன்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை தான் திட்டமிட்டு வருவதாகவும், மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, சுபீட்சமிக்க மாகாணமாக வடமேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கம் என்று கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் சங்கட்டிக்குளம் பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச தொழிலதிபர் ஹசங்க திசாநாயக்க, பாடசாலை அதிபர் அஷ்ரப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.