சம்மாந்துறை அஷ் ஷெய்க் ஹசனார் அவர்களின் மறைவையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால செயற்பாட்டாளரும்,கட்சியின் பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து தியாகத்துடன் உழைத்த கட்சிப் போராளியுமான சம்மாந்துறையைச் சேர்ந்த அஷ் ஷெய்க் ஹசனார் மௌலவி அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த கவலை அளித்ததோடு, கட்சியின் செயற்பாட்டில் நிரப்ப முடியாத ஓர் இடைவெளியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமுதாய பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களின் போது எமது தலைமைக்கு மிகுந்த உறுதிப்பாட்டுடன் பங்களிப்பு செய்தவரும், தலைமையின் மறைவின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து கட்சியின் இருப்பைத்தக்க வைத்து, உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவருமான அசனார் மௌலவி அவர்களின் பங்களிப்பு சாமான்யமானதல்ல.
கட்சி எடுத்த அனைத்து முடிவுகளையும் சிரமேற்கொண்டு , சற்றும் பின்வாங்காது அதனை அம்பாறை மாவட்டம் முழுவதும் வியாபிக்கச் செய்வதற்கு அவர் பெருந்துணையாக இருந்து வந்தார்.
சம்மாந்துறையின் உள்ளகக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய மர்ஹூம் எம். பி.அலியார் ஹஸ்ரத் அவர்களின் சகோதரியின் மகனான அசனார் மௌலவி தன்னுடைய வாழ்நாட்களை சமூகத்திற்காக முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.
சம்மாந்துறை தப்லீஃஉல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றியதோடு, சம்மாந்துறையின் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் இறுதி வரை கடமையாற்றிய அன்னாரின் இழப்பு ஒட்டுமொத்த சம்மாந்துறைக்கும் ஆறாத் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக, கல்முனை ஹாமியா அரபுக் கல்லூரியிலும் அதன் ஆரம்ப காலத்தில் விரிவுரையாளராகவும் ,விடுதி பொறுப்பாளராகவும் அவர் சிறப்பாகக் கடமையாற்றியிருந்தார்.
உலமா காங்கிரசின் சம்மாந்துறை கிளையின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட கிளையின் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிய அவரின் செயற்பாடுகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவை.
இன்று(14) தமிழகத்தில்,தஞ்சாவூரில்,உயர் கல்விக் க ல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில்பிரதம அதிதியாக கலந்து கொள்ள உடன்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தினால் சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கும்போது இந்தத் துயரச் செய்தி என்னை எட்டியது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை அருள்வானாக.
அன்னாரின் குடும்பத்தினருக்கு குறிப்பாக சட்டத்தரணி பிர்னாஸ் உட்பட அவரின் புதல்வர்கள் ,உறவினர்கள் மற்றும் அவர்மீது பற்றுக் கொண்டிருந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும்,கட்சியின் சார்பிலும்
அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.