விளையாட்டு

லெஜன்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது இந்தியா

இங்கிலாந்தில் இடம்பெற்றுவந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் யூனுஸ்காண் தலைமையிலான பாகிஸ்தான் லெஜன்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய யுவராஜ்சிங் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி சம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இத் தொடரில் மொத்தம் 6 நாடுகளின் அணிகள் பங்கேற்றிருந்தன. அதற்கமைய ஜெக்ஸ் கலிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா, பிரட் லீ தலைமையிலான அவுஸ்திரேலியா, கெவின் பீட்டர்ஸன் தலைமையிலான இங்கிலாந்து, யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா, கிறிஸ் கெய்ல் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் யூனுஸ்காண் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகலே இத் தொடரில் பங்கேற்றிருந்தன.

இதில் முதல் சுற்று லீக் ஆட்டமாக இடம்பெற்றன. அதில் ஒரு அணி மற்றைய 5 அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் மோதியிருந்தது. அதற்கமைய குழு நிலையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. அதற்கமைய முதல் சுற்றுடன் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருந்தன.

அதனடிப்படையில் முதல் அரையிறுதிப் போட்டியில் குழு நிலையில் 2ஆம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணியும், 3ஆம் இடம்பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த அவுஸ்திரேலிய அணி 4ஆம் இடம்பிடித்த இந்திய அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியில் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அதற்கமைய இத் தொடரின் இறுதிப் போட்டியில் பரம வைரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று பார்மிங்காமில் பலப்பரீட்சை நடாத்தின. போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவரான யூனுஸ்காண் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது. பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 41 ஓட்டங்களையும், கம்ரான் அக்மல் 24 ஓட்டங்களையும் எடுத்தனர். இந்தியா சம்பியன்ஸ் அணியின் அனுரீத் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இந்திய சம்பியன்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்து சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது. துடுப்பாட்டத்தில் அம்பதி ராயுடு 50 ஓட்டங்களையும்,குர்கீரத் சிங் மான் 34 ஓட்டங்களையும், யூசுப் பதான் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆமிர் யாமின் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *