ரணில் ஒரு கேம் காரன்.அவரின் கேம் எல்லாம் தோல்வியில் தான் முடியும்.- பாராளுமன்றத்தில் அனுர குமார
“அரசியலமைப்பு மற்றும் பிற ஏனைய சட்டங்களால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு 2024 செப்டெம்பர் மாதம் 17 அந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவேண்டுமென இந்த சபை பிரேரிக்கின்றது.”bமேலெழுந்தவாரியாக நோக்கும்போது இவ்வாறான பிரேரணையொன்று தேவைப்படமாட்டாது. அரசியலமைப்பிற்கும் அதற்கு நேரொத்தாக அமையத்தக்கதாகவும் ஆக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் அமைவாக இந்த ஜனாதிபதி தேர்தல் இந்த செப்டெம்பர் மாதம் 17 அந் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆந் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நடாத்தப்படவேண்டும்.
அதனால் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. இந்த 17 ஆம் திகதியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வருகின்றது. மக்கள் மத்தியில் பாரிய சந்தேகமும் குழப்பநிலையும் கொண்டுவரப்பட்டுள்ளதாலேயே இத்தகைய பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டி நேர்ந்துள்ளது. இது இன்று மாத்திரமல்ல உள்ளூரதிகாரசபைகள் தேர்தலும் பிற்போடப்பட்டது. மாகாணசபைகள் தேர்தல் ஐந்து வருடங்களுக்கு கிட்டிய காலமாக நடாத்தப்படவில்லை. அதனால் ஜனாதிபதி ஏதாவது தில்லுமுல்லு வேலையொன்றை ஜனாதிபதி தேர்தலுக்கும் போடுவாரென்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உள்ளூரதிகார சபைகள் தேர்தல் நடைபெறாவிட்டால் ஆணையாளரொருவரால் நிருவகிக்கப்பட முடியும். மாகாண சபைகள் நிறுவப்பட்டிராவிட்டால் ஆளுனரொருவரால் நிருவகிக்கப்பட முடியும். எனினும் ஜனாதிபதியொருவர் இல்லாவிட்டால் அரசாங்கமும் கிடையாது. ஏனெனில் அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் ஜனாதிபதியாவார். அதனால் நாங்கள் உடன்படாத விடயங்கள் இருந்தாலும் எமது அரசியலமைப்பில் இது சம்பந்தமாக பரிபூரணமாக விடயங்கள் காட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதவியை ஒருமணித்தியாலம்கூட வெற்றிடமாக வைக்கத்தக்கதாக தயாரிக்கப்படவில்லை. அதனால் எமது நாட்டில் கட்டாயமாக ஜனாதிபதியொருவர் இருத்தல் வேண்டும்.
அடுத்ததாக தோன்றுகின்ற பிரச்சினை இந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பதாகும். அரசியலமைப்பின் 30(2) உறுப்புரையில் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதி ஐந்து வருடங்கள் பதவிவகிப்பதாக மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 83 ஆவது உறுப்புரையின் ‘ஆ’ பிரிவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறுவருடங்களை விஞ்சுமாயின் மக்கள் தீர்ப்பு அவசியமென குறிப்பிடப்படுகின்றது. இந்த பிரிவினை அடிப்படையாகக்கொண்டு பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஒரு கூட்டத்தின்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து மற்றும் ஆறு என இருப்பதனால் அதனைத் தீர்ப்பதற்காக திருத்தமொன்றைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதென கூறினார்.
எனினும் அவ்வாறான அமைச்சரவைப் பத்திரமொன்று கொண்டுவரப்படவில்லையென அமைச்சர்கள் கூறினார்கள். எனினும் அதன்பின்னர் அமைச்சரவைப் பத்திரமொன்று கொண்டுவரப்பட்டது. எனவே ரங்கே பண்டாரவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இடத்தில் உரையாடலொன்று இடம்பெற்றுள்ளமை அதன்மூலமாக தெளிவாகின்றது. அதன் மூலமாக ஒரு மாளிகைக்குள் சூழ்ச்சி இடம்பெற்று வருவதே கூறப்படுகின்றது. வஜிர நீங்கள் கட்டாயமாக அந்த இடத்தில் இருக்கிறீர்கள். அது கட்டாயமானதாகும். இடம்பெற்றுள்ள உரையாடலை ரங்கே பண்டாரவால் ஒழுக்கத்துடன் பாதுகாக்க முடியாமல் அவர் வெளியில் பாய்ந்தார்.
அதன் பின்னர் அமைச்சரவை அத்தகைய பத்திரமொன்றைக் கொண்டுவந்தது. “ஆறு வருடங்களை விஞ்சி செல்கின்ற எனும் சொற்களுக்கு பதிலாக ஐந்து வருடங்களை விஞ்சி செல்கின்ற எனும் சொற்கள் மூலமாக அரசியலமைப்பின் 83 (ஆ) உறுப்புரையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பிற்கு திருத்தமொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு மேதகு ஜனாதிபதி அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டில் அரசியல் அமைப்புக்கான பொருள்கோடல் வழங்குகின்ற அதிகாரம் இருப்பது அமைச்சரவைக்கோ பாராளுமன்றத்திற்கோ அல்ல: உயர்நீதிமன்றத்திற்கே ஆகும். பதவிக்காலம் ஐந்தா, ஆறா என்ற கேள்வியை மூன்று தடவைகள் உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது. 2018 ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2021 வரை பதவி வகிக்க முடியுமா என அபிப்பிராயத்தை வினவினார். அவ்வேளையில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயம் ஐந்து வருடங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது தருணம் 2019 ஆண்டு ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் ஒருவர் நீதிமன்றத்திற்கு மனுவொன்றை தாக்கல் செய்து மீண்டும் அந்த நிலைமையை கேள்விக்குட்படுத்தினார். ஜனாதிபதியின் பதவிக்காலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் பொருள்கோடலை பகிரங்கப்படுத்தும்வரை ஜனாதிபதி தோ்தல் நடத்தப்படுவதை தடுக்குமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு அவர் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் அதனை பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமலேயே நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது. அதன் பின்னர் திரு. லெனவ தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல பதவிக்காலம் ஐந்து வருடங்களென தீர்மானித்து ஜனாதிபதி தோ்தல் ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது. பொருள்கோடல் வழங்குதல் மாத்திரமன்றி நடைமுறையிலும் நடந்தேறியுள்ளது. அரசியலமைப்பு பற்றிய பொருள்கோடல் வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் பதவிக்காலம் பற்றிய தனது அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தில் 83வது உறுப்புரை மீது கை வைக்காதிருந்தமைக்கான காரணம் அது மக்கள் தீர்ப்புக்கு ஏதுவாக அமையுமென்பதாலாகும். அதைப்போலவே 32 (ஆ) உறுப்புரையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் என்ன கூத்து இந்த கதிரையில் அமர்ந்திருப்பதற்காக? திட்டவட்டமாக அது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மக்களினதும் கருத்தாக நிலவுவது ரணில் விக்கிரமசிங்க ஒரு கேம்காரன் என்பதால் ஏதாவது முடிச்சுப்போடுவார் என்று.
வஜிர அபேவர்த்தன கூறுகிறார் மேலும் பத்து வருடங்கள் இருக்க வாய்ப்பு வழங்கவேண்டுமென்று. முட்டுக்கொடுப்பதற்கு உங்களை வைக்கவேண்டும். ரங்கே பண்டார கூறுகிறார் இன்னும் ஒரு வருடம் வைத்துக்கொள்ள மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்தவேண்டுமென்று. இதனால் நாட்டில் ஒரு குழப்பநிலை உருவாகியிருக்கிறது. ரணில் மிகப்பெரிய சூத்திரதாரி, முடிச்சிபோடுபவர் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் பாவம். ரணில் சூத்திரதாரியுமல்ல: முடிச்சிப்போடுபவருமல்ல. அந்த மண்டையால் அடித்த எல்லா கேம்களும் தோல்விகண்டு விட்டன.
அவர் அப்படிப்பட்ட பாரிய கேம்காரர் என்றால் அவர் மிக அதிகமாக கட்சிக்குள்ளேயே கேம் அடித்தார். அவர் அரசாங்கத்தை நெறிப்படுத்தியதை விட கட்சியைத்தான் நெறிப்படுத்தியிருக்கிறார். 94 இருந்து 2019 வரை கட்சியைத்தான் நெறிப்படுத்தினார். அவர் 2002 இல் இருந்து 2004 வரை அரசாங்கத்தை நெறிப்படுத்தினார். அதன் பின்னர் 2015 இல் இருந்து 2019 வரை நெறிப்படுத்தினார். தற்போது இரண்டு வருடங்களாக நெறிப்படுத்துகிறார். கட்சியை முப்பது வருடங்களாக நெறிப்படுத்தி கேம் அடித்து இறுதியில் பாராளுமன்றத்திற்கும் வரமுடியாமல் போயிற்று. அவர் அடித்த கேம் ஒன்றுமே வெற்றிபெறவில்லை. அதனால் ஜனாதிபதி தோ்தலை தடுப்பதற்காக எடுக்கின்ற எந்தவொரு நடவடிக்கையும் வெற்றிபெறமாட்டாதென்பது தெளிவாகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம் மாஸ்டர். அவர் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டவரின் தோள் மீது கையைபோடும் அளவிற்கு கேம் அடித்தார். இந்த திருத்தத்தை அவசர சட்டம் மூலமாக கொண்டு வர முயற்சி செய்கிறார். 2010 இல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலமைப்புக்கான 18 வது திருத்தத்தை ஒரு அவசர சட்டமூலமாகவே கொண்டுவந்தார். இரண்டு தடவைகளுக்கு பதிலாக அதற்கு மேலதிகமான தடவைகள் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட முடியுமென திருத்தத்தை கொண்டுவந்தார்.
2016 ஆம் ஆண்டில் அவருக்கு தோன்றுகின்ற சிக்கலொன்றுடன் சம்பந்தப்பட்ட விடையமொன்றை 2010 டிசம்பர் மாதத்தில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான அவசர சட்டமூலமாக கொண்டுவந்தார். புதிய பாராளுமன்றத்தில் 2/3 உடன் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துக் கொண்டுவந்த திருத்தம் தோல்விகண்டது. அவசர சட்டமூலமாக கொண்டுவரப்படுவது மிகவும் பாதகமான தேவைகளுக்காகவே என்பதால் 19 ஆவது திருத்தத்தில் அந்த வாய்ப்பு நீக்கப்பட்டது.
21 வது திருத்தத்தில் அவசர சட்டமூலங்களை கொண்டுவருதல் தேசிய பாதுகாப்பு பற்றிய பிரச்சினை மற்றும் திடீர் அனர்த்த நிலைமை தோன்றியவிடத்து அவசியமான சட்டங்களை ஆக்குதல் ஆகிய இரண்டு தருணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதைப்போலவே அரசியலமைப்பு திருத்தமொன்றை அவசர சட்டமூலம் ஒன்றாக கொண்டுவரமுடியாது என்பது விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவசர சட்டமூலம் என்ற வகையில் இந்த திருத்தம் பாராளுமன்றத்திற்கு வரமாட்டாது.
பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாக குறைக்கின்ற பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து குழு நிலையில் கேம் அடிப்பாரோ என்ற சமூக உரையாடல் ஒன்றை உருவாக்குகிறார்கள். மாகாண சபைகள் தோ்தல் திருத்தச்சட்டத்தின் சாரத்திற்கு முற்றாகவே முரணான வகையில் திருத்தங்களை மேற்கொண்டார்கள். அதனால் சட்ட வரைஞர்கள் இந்த சட்டத்தின் உட்பொருளில் தாக்கம் ஏற்படுகின்ற திருத்தங்களை குழுநிலையில் கொண்டுவர முடியாதென்பதை உறுதி செய்தார்கள். அவசர சட்டமூலம் என்ற வகையில் கொண்டுவரவும் முடியாவிட்டால் எதற்காக அமைச்சரவை முன்மொழிவொன்று அங்கீகரிக்கப்பட்டது.?
அமைச்சரவை திருத்தத்திற்கு இணங்க சம்பந்தப்பட்ட திருத்தங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தினால் வகுக்கப்படவேண்டும். அந்த சட்டமூலம் அமைச்சரவைக்கு வரவேண்டும். அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒரு வாரம் காத்திருக்கவேண்டும். அதன் பின்னர் பாராளுன்றத்தில் இரண்டு வார காலம் இருக்கவேண்டும். அதற்கிடையில் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து மூன்று வார காலம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்விதமாக கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு மேற்பட்ட காலம் எடுக்கும்.
அதைவேளையில் இந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்றது. தோ்தல்கள் ஆணைக்குழு 16 நாட்களுக்கும் 21 நாட்களுக்கும் இடையில் வேட்பு மனுக்களை கோரவேண்டும். 28 நாட்களுக்கும் 42 நாட்களுக்கும் இடையில் தோ்தல் நடாத்தப்படல் வேண்டும். இந்த சட்டம் போகின்ற வேகத்தையும் தோ்தல் நடாத்தப்படுகின்ற வேகத்தையும் பார்த்தால் சட்டம் பாராளுமன்றத்திற்கு வரும்போது ரணில் வீட்டில் இருப்பார். தனது காலத்திற்குள் எந்தவிதமான ஏற்புடைமையும் இல்லாத சட்டமாகும்.
உயர்நீதிமன்றத்தினால் மிகவும் சிறந்த முறையில் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ள சட்டமொன்று சம்பந்தமாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்ற ஒருவர் அமைச்சரவையில் ஏன் கையை உயர்த்தினார்? இது ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் என விளங்கவில்லையா? உண்மையாகவே எடுத்துக்கொண்டால் 83 (ஆ) உறுப்புரை பயனற்ற ஒரு பிரிவாகும். உயிர் இல்லை. 32 (ஆ) உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி 83 (ஆ) உறுப்புரை உயிரற்றதாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இறந்த உறுப்புரையொன்றை நீக்கவேண்டுமானால் பின்னொரு நேரத்திலே நீக்குவோம். முக்கியமான விடயம் என்னவென்றால் 83 ஆவது பிரிவில் கைவைக்க வேண்டுமானால் மக்கள் தீர்ப்பு ஒன்று அவசியமாகும்.
ஜனாதிபதி தோ்தல் ஒன்று நடாத்தப்படுகின்ற வேளையில் மக்கள் கருத்துக்கணிப்பொன்றையும் கொண்டுவர முயற்சி செய்வதன் மூலமாக சமூகத்திலே பாரிய குழப்பநிலை உருவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இவை அனைத்தையும் செய்கிறார். அடிக்கடி சமூகத்தில் சந்தேகம், ஐயப்பாடு, குழப்பநிலை, அவநம்பிக்கையை உருவாக்குவது அவருடைய பொழுதுபோக்காக அமைந்துள்ளது. சமூகத்தை குழப்பநிலைக்கு தள்ளிவிட்டு சிரித்து மகிழ்வதை ரணில் விக்கிரமசிங்க தனது பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் வளர்த்து சிரிப்பது அவருடைய பொழுதுபோக்காகும். ஒரு முடிச்சிப்போடுவார். ஆட்கள் அதற்கு பின்னால் போவார்கள். எல்லோருமே ஒன்று சோ்ந்து சிரிப்பார்கள். சிறுபிள்ளைத்தனமான மனோநிலையே இருக்கின்றது.
இப்படிப்பட்ட ஒருவருக்கு சுசில் பிரேமஜயந்த போன்ற ஒருவர் எதற்காக கீழ்படிவது? அமைச்சரவையில் இது பற்றி கூறியிருக்கலாமே. சட்டவல்லுநர், மிகப்பெரிய அறிவாளி விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவையில் இருக்கிறாறே. அவர்கள் இதை அங்கீகரித்து அனுப்புகிறார்களே. சமூகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு முடிச்சிகள் போடப்படுவதை இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்க மேலேயிருந்து போடுகின்ற முடிச்சிகளுக்கு இந்த பாராளுமன்றம் கட்டுப்பட மாட்டாதென்பதை தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவேண்டும்.
பாராளுமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு நேரொத்ததாக ஜனாதிபதி தோ்தலை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்தகைய கோரிக்கையொன்று அவசியமில்லாவிட்டாலும் நிலவுகின்ற குழப்பநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பிரேரணையை நிறைவேற்றுகிறோம். ரணில் விக்கிரமசிங்க குழப்பமடைந்துள்ளார். நான் அறிந்த வகையில் அரசாங்கத்திற்குள் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான தயார் நிலையில் இருக்கிறார்கள். அமைச்சரவைக்குள்ளேயே இருவர் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, விஜேதாச ராஜபக்ஷ இருவருமே ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கூறிக்கொள்கிறார்கள்.
எனினும் இருவரும் அமைச்சரவையில் ஒன்றுகூடுகிறார்கள். அதற்கு மேலதிகமாக ஆளுங்கட்சியின் தம்பிக்க பெரேரா அவர்களும் வேட்பாளராக போட்டியிடுவதாகக் கூறுகிறார். விஜேதாச வருவாரா, தம்மிக வருவாரா, நாமல் என்ன செய்வார், பசில் ராஜபக்ஷ என்ன செய்வார்? என்ற குழப்பநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது. அவர் தோ்தல் சம்பந்தமாக தனக்கு இருக்கின்ற குழப்பநிலையை சமூகம் மீது சுமத்தப் பார்க்கிறார். சமூகம் மீது சுமத்தாமல் அமைந்துள்ள குழப்ப நிலையிலிருந்து விடுபட முயற்சி செய்யுமாறு நாங்கள் அவரிடம் கூறிக்கொள்கிறோம்.