முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகான் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..! ஒரு வாரத்துக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக ரிஷாட் எம்.பியிடம் கல்வி அமைச்சர் உறுதி..!
திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை உறுதியளித்தபடி வெளியிட்டமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதேபோன்று, 13 முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகாண் பரீட்சை பெறுபேறுகளையும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த ரிஷாட் எம்.பி, மேலும் கூறியதாவது,
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நான் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்தவகையில், அவர் ஒரு இனவாதி அல்ல. இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்துபவர்.
எனவே, கல்வித் திணைக்களம் மற்றும் பரீட்சை திணைக்களம் ஆகியவற்றில் இடம்பெறும் குளறுபடியான நடவடிக்கைகளுக்கும் பாரபட்சமான அணுகுமுறைகளுக்கும் சில அதிகாரிகளே காரணம் என்பதை என்னால் கூற முடியும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்காக சுற்றுநிருபம் ஒன்றை உடனடியாக வெளியிடுவது சிறந்ததாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு உடனே பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில், நிலைமையை ஆராய்ந்து, அதிபர்களின் பரீட்சை பெறுபேறுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டிடம் உறுதியளித்தார்.
(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)