உள்நாடு

நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கூட்டுறவுச் சங்கங்கள் என்பது இலங்கையில் மாத்திரமன்றி உலகிலும் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகரமான சமூக தொழில்முனைவு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதொரு முன்னெடுப்பாகும். தற்போது, ​​நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14,000 கூட்டுறவுச் சங்கங்கள் காணப்படுகின்றன. ஆனால் பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளால் அவற்றின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும், அவற்றை மேம்படுத்தவும் விசேட வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனசவிய திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அதன் மூலம் வழங்கப்பட்ட பிரதிபலன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழங்கப்பட்டன. அதன் மூலம் கூட்டுறவுச் சங்கம் பலம் பெற்றன, தற்போது கூட்டுறவுச் சங்கம் வீழ்ச்சி கண்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து கூட்டுறவுத் திட்டங்களை வினைதிறனாக முன்னெடுத்து கட்டியெழுப்ப அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கூட்டுறவு திட்டங்கள் தொடர்பாக நேற்று (11) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட மாகாணத்திற்கு வெளியே வியாபாரம் செய்யும் திறன் மற்றும் சில வணிக முயற்சிகளில் இணைவதற்கான வாய்ப்பு ஆகியவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகள் பல்வேறு தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக நடத்த கூட்டுறவு சங்கங்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஸ்பெய்னிய MONDRAGON Corporation, இந்திய Amul, நியுசிலாந்து Fonterra,  அமெரிக்கா ocean spray என்பவற்றை  உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாய உற்ப்பத்திகள், பால் பொருட்கள் மற்றும் சில சிறு தொழில்கள் ஆகியவை கூட்டுறவு அமைப்பின் மூலம் சிறப்பாக முன்னெடுக்கப்படும் பிரபலமான திட்டங்களாகும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் வீழ்ச்சியடைந்து வரும் இவ்வேளையில், உற்பத்திகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுக்கவும், சிறுதொழில்களை மீண்டும் வலுவூட்டுவதற்கும் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பல நன்மைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் கூட்டுறவுத்துறையில் தொடரும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து ஆராய்ந்து கூட்டுறவுத்துறையை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு, கூட்டுறவுத்துறையில் ஊழலை ஒழிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *