உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளின் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் உள்ள இரண்டு பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பிரதான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சிங்கள மொழி மூலம் இஸ்லாத்தை போதிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தாமதமாகி வரும் அல் ஆலிம் பரீட்சை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளுக்குத் தேவையான பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மாணித்தல், விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதுடன் மேலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றைத் உடனடியாக தீர்க்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரச நிறுவனங்களுக்கும் இடையில் நல்லதொரு ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆப் தி எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா உட்பட தொடர்புள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *