அமானா வங்கி புத்தளம் கிளையை புதிய மற்றும் மேம்படுத்திய பகுதிக்கு இடம்மாற்றியுள்ளது..!
அமானா வங்கி தனது புத்தளம் கிளையை அதிகளவு இடவசதி படைத்த, சௌகரியமான புதிய வளாகத்துக்கு இடம்மாற்றியுள்ளது. இல. 34, குருநாகல் வீதி, புத்தளம் எனும் முகவரிக்கு இந்த கிளை இடம்மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வாடிக்கையாளர் சேவை மற்றும் வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்த செயற்பாடு அமைந்துள்ளது. வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், பிரதம இடர்முகாமைத்துவ அதிகாரி எம் எம் எஸ் குவிலித், பிரதம நிதி அதிகாரி அலி வாஹித் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த புதிய முகவரிக்கு மாற்றப்பட்ட புத்தளம் கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார், பிரதேசவாசிகள், வியாபார உரிமையாளர்கள், உள்ளூர் அதிகாரசபையினர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிராந்தியத்தின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேம்படுத்தப்பட்ட சேவை அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கமைய, புதிய புத்தளம் கிளையினூடாக, கணக்கு ஆரம்பித்தல், வாகன நிதிவசதியளிப்பு, வீட்டு நிதிவசதியளிப்பு, தனிநபர் நிதிவசதியளிப்பு, தங்கச் சான்றிதழ் நிதிவசதியளிப்பு, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்திற்கான வங்கியியல், வர்த்தக சேவைகள் மற்றும் பண மீளப்பெறுகைகள், உடனடி பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் அடங்கலாக நவீன வசதிகள் படைத்த 24×7 வங்கியியல் வலயம் ஆகியன அடங்கியுள்ளன.
இந்நிகழ்வில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பார்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “2013 ஆம் ஆண்டு முதல் புத்தளம் பகுதியில் பிரசன்னத்தைக் கொண்டிருப்பதுடன், அதிகளவு இடவசதி மற்றும் நவீன வசதிகள் படைத்த வளாகத்துக்கு எமது புத்தளம் கிளையை இடம்மாற்றி, புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு எமது வங்கியியல் சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்துள்ளதையிட்ட நாம் பெருமை கொள்கின்றோம். இப்பிராந்தியத்திலிருந்து அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் இருப்பை இது பிரதிபலிப்பதுடன், வங்கியியலை அதிகளவு சௌகரியமாக்கல் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களாலும் அணுகக்கூடியதாகச் செய்தல் போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வங்கியியல் அனுபவத்தை பெருமளவு மேம்படுத்துவது மாத்திரமன்றி, சமூகத்தாருடன் சிறப்பாக தொடர்புகளை பேணி, அவர்களின் நிதித் தேவைகளை வினைத்திறனான முறையில் அறிந்து கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும் எனக் கருதுகின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.