உலகம்

விலையுயர்ந்த போர்வையை கஃபாவுக்கு போர்த்தி உலக முஸ்லிம்களை மகிழ்விக்கும் சவுதி அரேபியா

இமாம் சவுத் அவர்களின் காலம் தொட்டு இன்று வரை ஆட்சி செய்கின்ற சவுதி அரேபிய மன்னர்கள் இரு புனித மஸ்ஜித்களான மக்கா, மதீனாவுக்கு மிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதன் பெருமை அல்லாஹ்வின் அருளால் ஆல் ஸஊத் பரம்பரையினரையே சாரும்.

சவுதி அரேபியா உருவாக்கத்திலிருந்து இன்று வரைக்கும் அதன் ஆட்சியாளர்கள் புனித ஸ்தலங்களை நாடி வருகின்ற அல்லாஹ்வின் விருந்தாளிகளுக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருகின்றனர். இதன் நிமித்தம் அவர்கள் எடுத்துக் கொள்கின்ற அக்கரை, அர்ப்பணிப்புகள், செலவுகள் பாரியளவிலான சேவைக்கு வித்திடுகிறது. அனைத்தையும் உலக முஸ்லிம்கள் பாராட்டுவதோடு அவர்களுக்காக துஆ (பிராத்தனை) வும் செய்கின்றனர்.

மக்காவிலுள்ள புனித கஃபதுல்லாஹ்வுக்கு வருடா வருடம் முஹர்ரம் முதலாம் நாள் புதிய போர்வையைப் போர்த்துவதும் சவுதி மேற்கொள்ளும் பாரிய சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. அந்த வகையில் இவ்வருடம் முஹர்ரம் முதலாம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) கஃபாவுக்கு புதிய போர்வை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையோடு வைபவ ரீதியாக போர்த்தப்பட்டது.

இப்போர்வையைத் தயாரிக்கவென தனியான நிர்வாகக் கட்டமைப்பையும் நெசவாலையையும் தன்னகத்தே கொண்டுள்ள சவுதி அரேபியா, இப்போர்வையை நெய்வதற்காக தனித்துவமான நூல் வகைகள், நிறமூட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிற்சாலையிலேயே மேற்கொள்கிறது. அத்தோடு தங்கம், வௌ்ளி மற்றும் பட்டு ஆகியவற்றை உள்ளடக்கி அதியுயர்ந்த பெறுமதி மிக்கதாக தயாரிக்கப்படும் இப்போர்வை சுமார் 120 கிலோ கிராம் எடை கொண்ட உயர் ரகத் தங்கம், 100 கிலோ கிராம் எடை கொண்ட வெள்ளி, 1000 கிலோ கிராம் கொண்ட உலகில் மிகச் சிறந்த பட்டு என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

இப்போர்வையைத் தயாரித்தல் மற்றும் வடிவமைக்கும் பணிகளிலும் அது தொடர்பான நிர்வாகக் கட்டமைப்பிலும் சவுதியின் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்பணிகளுக்கென வருடாவருடம் 30 மில்லியன் ரியால்களை செலவு செய்து வரும் சவுதி கஃபதுல்லாஹ்வின் போர்வையைத் தயாரிப்பதற்காகவும் அதனை கஃபாவில் போர்த்துவதற்காகவும் அளப்பரிய சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

பொதுவாக ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு பெருநாள் தினங்களிலும் விஷேட தினங்களிலும் புத்தாடைகளை அணிவித்து ஆனந்தம் அடைவர். அதேபோன்று ஒவ்வொரு வருடமும் அல்லாஹ்வின் மாளிகையான புனித கஃபதுல்லாஹ்வுக்கு அதியுயர்ந்த போர்வையைப் போர்த்தி தாங்களும் சந்தோஷப்படுவதோடு உலக முஸ்லிம்களையும் சந்தோஷப்படுத்தி கொண்டிருக்கின்றனர் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள்.

புனித கஃபதுல்லாஹ்வுக்கு வருடா வருடம் புதிதாகப் போர்த்தப்படும் இப்போர்வை உலகிலே மிகப்பெரிய பெறுமதிமிக்க போர்வை. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அல்லாஹ்வின் மாளிகை என்பதால் அதிவிலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு தனித்துவமான முறையில் இப்போர்வையைத் தயாரித்து வருடா வருடம் கஃபாவுக்கு போர்த்தும் பணியை அன்று தொட்டு இன்று வரை சவுதி மேற்கொண்டு வருகின்றது. இது அனைவராலும் பாராட்டத்தக்க பணியாக அமைந்திருக்கிறது.

இந்த இரு புனித ஸ்தலங்களுக்கும் மிக முக்கியத்துவம் அளித்து இப்புனித ஸ்தலங்களை சிறப்பான முறையில் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் கஃபதுல்லாஹ்வுக்கு புதிய போர்வையைப் போர்த்தும் பணி மன்னர் அப்துல் அஸீஸின் காலத்தில் இருந்து மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் மன்னரின் தலைமை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸஊத்தும் மிகச் சிறந்த முறையில் இந்த இரு புனித ஸ்தலங்களையும் பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய மன்னர் சல்மானுக்கு ‘இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர்’ என்ற நாமம் சூட்டப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிவருகின்ற சேவைகளின் நிமித்தமாகும்.

உலகின் முதலாவது மஸ்ஜிதாகவும் முஸ்லிம்கள் தொழுகைக்காக முன்னோக்கும் தலமாகவும் விளங்கும் கஃபாவுக்காக இவ்வாறு மகத்துவம் மிக்க சேவையாற்றிவரும் மன்னர் சல்மான், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சரும் சவுதி அரேபியா அரசும் என்றும் எமது நன்றிகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் உரியவர்களாவர்.

 

மெளலவி எம்.எச். ஷைஹுத்தீன் (மதனி)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *