பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் சம்பியன் கிண்ணப் போட்டி இலங்கையில்…!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும் நடுநிலையான ஓர் இடத்தை இந்திய கிரிக்கெட் சபை ஐசிசியிடம் கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் நிலவும் அரசியல் பகைமையால் இந்தியா அணி கடந்த 2008 ஆம் ஆண்டின் பின் பாகிஸ்தான் செல்வதை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
அதனால் துபாய் அல்லது இலங்கையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐசிசி) பிசிசிஐ கோரிக்கை விடுக்க உள்ளது. பெரும்பாலும் இலங்கையில் இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிகள் இலங்கையிலேயே நடத்தப்பட்டன.
இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பகை எப்போது தீரும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வரைவின் படி, இந்தியாவும் பாகிஸ்தானும் மார்ச் 1 ஆம் திகதி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நேருக்கு நேர் மோத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.