உலகம்

இலங்கையின் ஐகேம் அபாகஸ் (ICAM ABACUS) மாணவர்கள் மலேசியாவில் வெற்றி வாகை சூடி சாதனை

ஜென்டிங் சர்வதேச அபாகஸ் போட்டியானது மலேசியாவின் ஜென்டின் நேஷனல் கன்வென்ஷன் மண்டபத்தில் அண்மையில் (07) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியில் மலேசியா,சீனா, தாய்வான், கொரியா, அவுஸ்திரேலியா, இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை சேர்ந்த பல மாணவர்கள் பங்குபற்றினர். மலேசியா கல்வி அமைச்சின் விளையாட்டு, இணை பாடத்திட்டம் மற்றும் கலை பிரிவின் உதவி இயக்குனர் டாக்டர் முகமத் அஸ்லி பின் ஜகரியா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் இலங்கையின் ஏகப்பிரதிகளான ஐகேம் அபாகஸ் மாணவர் குழு, 2500 பங்கேற்பாளர்களில் 12 முதல் இடங்கள், 15 இரண்டாம் இடங்கள் , 18 மூன்றாம் இடங்கள், 20 ஆறுதல் பரிசுகள், மற்றும் 25 பங்கேற்பு விருதுகளை பெற்று வெற்றியை பெற்றது. இலங்கையின் அபாகஸ் திறமையாளர்களுக்கு இது ஒரு மகத்தான சாதனையாகும்.

இப் போட்டியில் கண்டி, காலி, பேராதனை, மாத்தளை, பிலிமத்தலாவ, மாவனல்ல, அக்குரணை, சாய்ந்தமருது, புத்தளம், கல்பிட்டி, மடவளை, நீர்கொழும்பு, பொல்கஹவெல ஆகிய மையங்களைச் சேர்ந்த ஐகேம் அபாகஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கு ஐகேம் அபாகஸ் நிறுவனம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பணியை தொடர்ந்து வழங்கி அபாகஸ் கணிதத்தில் தேர்ச்சி பெற்று , கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சர்வதேச அரங்கில் வெற்றிக்கான முடிவற்ற வாய்ப்புகளைத் திறந்து கொள்ள வழி பிறந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கான அர்ப்பணிப்புள்ள வழிகாட்டியான ஐகேம் அபாகஸ் 2011 ம் ஆண்டு முதல் திறமையான இலங்கை மாணவர்களுக்கு வருடாந்தம் சர்வதேச அபாகஸ் போட்டிகளில் பங்குபற்றுவதில் சந்தர்ப்பம் வழங்கி வருகிறது.

ஐகேம் அபாகஸ் புத்தளம் கற்கை நிலையத்தின் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் :

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவிகள் எம்.எச்.கானியா ராஹா – 03 ம் , 04 ம் இடங்கள், எம்.என்.ஆயிஷா அபா –  04 ம் , 05 ம் இடங்கள்.

புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஐ.பாத்திமா செய்னா – 03 ம், 04 ம் இடங்கள்.

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எம்.எச்.ஹிபா சஹீ – 03 ம் , 04 ம் இடங்கள், எம்.ஆர்.ரைத் 03 ம் , 04 ம் இடங்கள், எம்.எச்.ரீமா செய்ன் இரண்டு 05 ம் இடங்கள்.

07 நாடுகள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கை சார்பில் 90 மாணவர்களை கொண்டு சென்ற ஐகேம் அபாகஸ் நிறுவனத்தின் முகாமையாளர்கள் டீ.எம். ஷாபி மற்றும் திருமதி ஷுக்ரா ஷாபி ஆகியோர் சிறந்த அபாகஸ் மனக்கணித கல்வி நிறுவன விருதினை பெற்றுக்கொண்டார்கள்.


(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *