உள்நாடு

சட்ட மா அதிபர் நியமன விவகாரம்.சட்டத்தரணிகள் சங்கத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள பதில்…!

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதமொன்றுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் 41 சீ பிரகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் உள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியை இந்தப் பதவிக்கு சேவை மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசியலமைப்பு ரீதியான அவசியம் கிடையாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரிக்கு சட்டமா அதிபர் பதவி வழங்கும் முறை இலங்கை வரலாற்றில் பின்பற்றப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் போன்றோரின் நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சேவை மூப்பிற்குப் புறம்பாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் பதவிக்காக பலரது பெயர்களை சிபாரிசு செய்ததோடு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியதையும் ஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சவையின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சாத்தியமான சகல நபர்கள் குறித்தும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர் பதவிக்கு தகுதியான வேறு நபர்கள் இருக்கையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருவரை மாத்திரம் ஆதரிக்கக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து வெற்றிடமான சட்டமா அதிபர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றின் ஊடாக கோரியிருந்தது. இந்தச் செயற்பாட்டின் ஊடாக சேவை மூப்பை மதித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்ச்சி நிலை மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதாகவும் அது சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிறுவப்பட்ட படிநிலைக்கு இணங்குவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சதுர ஏ. கல்ஹேனவினால் கையொப்பமிடப் பட்ட இந்தக் கடிதத்தில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கும் சட்டமா அதிபரின் முக்கிய வகிபாகத்தை வலியுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *