கல்வித்துறையில் நிலவும் மனித வளப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கல்வியை மேம்படுத்த முடியாது.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
கல்விசார ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரிய கல்வியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகள் என 7 பிரிவினர் கல்வித்துறையில் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவிட் காலப்பிரவில் இணைவழி கல்வியின் போது ஆசிரியர்களே மாணவர்களுக்கு இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஏழ்மையான மாணவர்களுக்கு போதிய உணவில்லாத சமயங்களில் அவர்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்கும் சிறந்த கல்வி முறையும் எமது நாட்டில் காணப்படுகிறது. இந்த கல்வித்துறையில் பணியாற்றி வரும் மனித வளத்துக்கு நல்ல மன திருப்தி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பாடசாலை முறையை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலே குறிப்பிட்ட கல்வித்துறையில் பணியாற்றி வரும் தரப்பினர் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டின் இலவசக் கல்வியில் 10096 பாடசாலைகள், 41 இலட்சம் மாணவர்கள், 12000 தொடக்கம் 14000 வரையிலான அதிபர்கள், 254000 ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வித்துறை நிர்வாகிகள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் அனைவரினதும் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாவிட்டால் எமது நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தப் பணத்தில் பாடசாலைகளுக்கு வளங்களை வழங்காமல் வேறு விடயங்களைச் செய்யலாம் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். பிள்ளைகளுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்ற கருத்து யதார்த்தமாக இருந்தால், அதை செயல் ரீதியாக முன்னெடுப்பது நமது பொறுப்பாகும். கல்வி என்பது அடிப்படை உரிமை என்றபடியால், அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வரி செலுத்துவோரின் நிதியைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் தரப்பினர் மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவது அவர்களினது பொறுப்பாகும். ஒவ்வொரு கணமும் எம்மால் முடியுமான மட்டில் நாட்டிற்கு பெறுமதி சேர்க்க வேண்டும். இந்த பெறுமதி சேர்க்கும் செயற்பாட்டால், குறைபாடுகள் களையப்படும். பிரபஞ்சம் வேலைத்திட்டம் வெறுமனே பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயல் அல்ல. அவ்வாறு முத்திரை குத்துவது தவறு. இது எதிர்காலத்துக்கான சிறந்த முதலீடாகும். கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழிப்பதே இந்த அனைத்து வேலைத்திட்டங்களின் நோக்கமாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 302 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, களனி, சிங்காரமுல்ல களனி மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நடனக்குக் குழுவுக்குத் தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.🟩 யார் எதிர்த்தாலும் ஆங்கில மொழி மையக் கல்வியை முன்னெடுக்க வேண்டும்.
எமது நாட்டின் கல்வி முறையில் பல பாடப் பிரிவுகளில் சிக்கல்கள் நிலவிவருகின்றன. கலைப் பிரவு பட்டதாரிகளுக்கு தனியார் துறையில் வேலை வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, யார் எதிர்த்தாலும், ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வியை நோக்கிச் செல்ல வேண்டும். சுயநல அரசியல் இலக்குகளை முன்னிறுத்தியே சிங்களம், தமிழ் என்று சொல்லி ஆங்கில மொழிக் கல்வியை புறம்தள்ள முயற்சிக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
தற்போது பல தரப்பினரும் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை விடுத்து வருகின்றனர். சம்பளத்தை அதிகரித்தால் வெட் வரியை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்று அரசு பதிலளித்துள்ளது. இவ்வாறான நிலையில், இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது என கேள்வி எழுப்புபவர்களுக்கு, சம்பிரதாய கட்டமைப்பிற்கு அப்பால் சென்று தீர்வுகளைத் தேடினால் நிதியை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் தீர்வுகளை எட்ட முடியும். இதற்கு பல வெற்றிகரமான வழிமுறைகள் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.