உலகம் எம்மை அங்கீகரிக்க மறுத்த ஒரு காலம் இருந்தது; உலகின் மூடிய கதவுகளைத் திறக்கும் இயலுமையை நாம் பெற்றுள்ளோம். – பிரதமர் தினேஷ் குணவர்தன
2024.07.08 அன்று மஹரகம வித்யாகர கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பிரதமரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் மேல்மாகாண சபையின் 250 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், “பெண்கள் கல்லூரிகளில் பிரதேசத்தில் முன்னணியில் இருக்கும் மஹரகம வித்தியாகர கல்லூரியில், எமது பிள்ளைகள் தமது பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்கிறார்கள். போட்டிப்பரீட்சைகளில், பன்முகத்தன்மையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற துறைகளுக்குச் செல்கிறார்கள். பெற்றோர், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியின் பயனை பிள்ளைகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்வியின் பெறுமதியை வேறு எதனாலும் குறைத்துவிட முடிவதில்லை. கற்றுக்கொள்வது மட்டுமே எஞ்சும். மற்ற விடயங்கள் நாம் உருவாக்கும் விடயங்கள். எனவே, அன்பார்ந்த பிள்ளைகளே, இந்தப் பாடசாலையில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் அறிவுச் செல்வம் உங்களது வாழ்க்கைக்கு பெறுமதியை சேர்க்கிறது.
1983 ஆம் ஆண்டு முதல் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் மஹரகம பிரதேசத்துடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டுள்ளேன். மஹரகம மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை உயர்த்துவதுடன் மஹரகம மக்களின் பிள்ளைகள் மீதான அன்பையும் மரியாதையையும் உயர்த்துவதற்கு எம்மால் பங்களிக்க முடிந்தது. அப்போது நாடு முழுவதும் சமுதாயத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. நமது சமூகத்தில் மட்டுமல்ல, உலக சமுதாயத்திலும் தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. நான் மஹரகம பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது இருந்ததை விட முற்றிலும் வித்தியாசமான முறையில் வித்தியாகர கல்லூரி முன்னேற்றமடைந்துள்ளது. கல்லூரிகளுக்கு மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் உதவி செய்துள்ளோம். ஏனெனில் நாம் மஹரகம நகரின் மையப்பகுதியில் வாழ்கின்றோம். வித்யாகர கல்லூரி மஹரகம நகரின் மையப்பகுதியாகும்.
நாம் கடினமான காலங்களில் வாழ்கிறோம். இதற்கு முன் இப்படியொரு காலகட்டத்தை எதிர்கொண்டதில்லை. பொருளாதார ரீதியாகவும், நிதி ரீதியாகவும் வழங்கக்கூடிய நிவாரணங்களில், இக்கட்டான காலகட்டத்தில் நாம் எடுத்த நடவடிக்கைகளினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்முறை மாகாண சபைக்கு அதிக பணத்தை வழங்க முடிந்தது. பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டது. இந்த ஆழமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன்போது கல்வி மற்றும் மக்களின் அன்றாட வசதிகளுக்கான நிதித் தலைப்புகளை வழங்குவதே முன்னுரிமைக்குரிய விடயமாகும்.
சவாலான காலகட்டத்தை நாங்கள் கடந்துவிட்டோம். நட்பும் சகோதரத்துவமும் காக்கப்பட வேண்டும். உலகம் நம்மை ஏற்றுக் கொள்வதை நிறுத்தியிருந்த ஒரு காலம் இருந்தது. இன்று உலகை மீண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து, உலகில் எமக்கு மூடிய கதவுகளை திறக்கும் மாபெரும் பங்களிப்பில் ஜனாதிபதியுடன் கைகோர்க்க என்னால் முடிந்துள்ளது. எந்த நாடும் நம்முடன் கொடுக்கல்வாங்கல் செய்ய முடியாது என்றார்கள். அது எவ்வளவு கடினமானது என்பதை மஹரகம மக்கள் அறிவார்கள்.
புறக்கோட்டையில் இருந்த வர்த்தகத்தை அன்று நாம் மஹரகமவுக்கு கொண்டு வந்தோம். பமுனுவவில் வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியும், வெளிநாட்டிலிருந்து ஒரு துண்டு துணி கொண்டு வருவதற்கு முன்பெல்லாம் எவ்வளவு சிரமம் இருந்தது என்பது. வெளிநாடுகள் எம்முடன் கொடுக்கல்வாங்கல் செய்யும் அனைத்துத் துறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக, ஒரு நாடாக நாம் இன்று நமக்குத் தேவையான பொருளாதாரப் பயணத்தில் பல்வேறு மாற்றங்களையும், புதிய திட்டங்களையும் ஆரம்பிக்க முடிந்துள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியை சிரமப்பட்டு கட்டியெழுப்பியுள்ளோம்.
இங்கு கருத்து தெரிவித்த மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, “இக்கட்டடத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் திறன்களை நாம் எப்போதும் உணர்ந்து, அந்தத் திறன்களை வளர்க்கப் பாடுபட வேண்டும். இந்த கட்டிடத்தை முதல் மாடியுடன் நிறுத்த முடியாது. மீதமுள்ள இரண்டு மாடிகளும் முடிக்கப்பட வேண்டும். அதற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என உறுதியளிக்கிறோம். இந்தப் பாடசாலையின் புலமைப்பரிசில், சாதாரணதரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் சிறப்பாக உள்ளது. எனவே, இந்த பாடசாலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவது எங்கள் பொறுப்பு.” என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.