ஹிஜ்ரி 1446 இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி..!
‘யா அல்லாஹ்! இந்தப் பிறையை அபிவிருத்தி உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாத்தையும் சாந்தியையும் கொண்டுவரக் கூடியதாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக! (பிறையே!) எனது இரட்சகனும் உனது இரட்சகனும் அல்லாஹ்வே தான்!
மலர்ந்திருக்கும் ஹிஜ்ரி 1446 இஸ்லாமிய புதுவருடத்தில் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர்வதோடு நாட்டின் அனைத்து விதமான நெருக்கடியான நிலைமைகளும் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுபீட்சத்துடனும் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
ஹிஜ்ரி நாட்காட்டி என்பது இஸ்லாத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நாட்கணிப்பு முறையாகும். ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அவரவர் கலாசாரங்கள், பண்பாடுகளின் அடிப்படையில் காலக் கணக்கீட்டு முறைகள் இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கும் தனித்துவமான ஒரு நடைமுறை இருக்கவேண்டும் என்பதற்காக இஸ்லாமிய வரலாற்றின் மறுமலர்ச்சியாக அமைந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து இந்நாட்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தவகையில் புதிய ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமானது, ஹிஜ்ரத் எனும் மதீனாவை நோக்கிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடம்பெயர்வையும் உலகத்திற்கே முன்மாதிரியாக நிறுவப்பட்ட மதீனா சாசனத்தையும் எமக்கு நினைவுபடுத்துகிறது.
ஒரு ஹிஜ்ரி ஆண்டில் முஹர்ரம் (ஆண்டின் முதல் மாதம்), ஸபர், ரபீஉனில் அவ்வல், ரபீஉனில் ஆகிர், ஜுமாதல் ஊலா, ஜுமாதல் ஆகிரா, ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல் கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய பன்னிரண்டு சந்திர மாதங்கள் உள்ளன. இவற்றில் முஹர்ரம், ரஜப், துல் கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய மாதங்களை இஸ்லாம் புனித மாதங்களாக அடையாளப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதன் மூலம் அந்தந்த மாதத்தின் ஆரம்பம் தீர்மானிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி நாட்காட்டி முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியலின் அடையாளமாகும். ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற வருடாந்த வணக்க வழிபாடுகள் ஹிஜ்ரி பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களாகும். அந்தவகையில் ஓர் ஆண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டிருக்கும். எனவே ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒரு வருடம், கிரிகோரியன் சூரிய நாட்காட்டியின் மொத்த நாட்களின் எண்ணிக்கையிலிருந்து பத்து அல்லது பதினொரு நாட்கள் குறைந்து காணப்படும்.
இவ்வாறு நாள், வாரம், மாதம், வருடம் என காலங்கள் மாற்றமடைவது மனிதர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும், எண்ணங்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதன் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மனிதர்கள் மீளவேண்டும் என்பதற்காகவுமே என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
‘இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.’ (ஸூரா புர்கான்: 62)
ஆக நாம் அடைந்திருக்கும் இப்புதுவருடத்தில் புத்துணர்வு பெற்று, அல்லாஹ்வின் பக்கம் மீள்வதோடு நல்லெண்ணம், நியாயம், நீதி, சகவாழ்வு, தேசப்பற்று போன்ற பண்புகளை எமது வாழ்வில் கடைபிடித்து நம் தாய்நாடான இலங்கைக்கும் முழு உலகிற்கும் பிரயோசனமுள்ளவர்களாகவும் முன்மாதிரி பிரஜைகளாகவும் வாழ்ந்து மரணிக்க அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் துணைநிற்பானாக.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்–ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா