நல்லாட்சியை மேம்படுத்தல் தொடர்பான செயலமர்வு..!
சமூகம் சார்ந்த விடயங்களில் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படும் WE Connect திட்டத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட செயலமர்வு சனிக்கிழமை (06) மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் காலநிலை மாற்றம், சூழல் பிரச்சினைகள், கழிவு முகாமைத்துவம், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், கடலரிப்பு போன்ற தலைப்புகளில் பல்வேறு விடயதானங்கள் கலந்துரையாடப்பட்டன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா அவர்களின் நெறிப்படுத்தலில் குரல்கள் இயக்கத்தின் தவிசாளரும்; பிரபல சட்டத்தரணியுமான றாஸி முஹம்மட், விடியல் இணையத்தள ஆசிரியரும் தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளருமான ஊடகவியலாளர் றிப்தி அலி ஆகியோர் இந்நிகழ்வின் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.