இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வினை வழங்கும்படி வலியுறுத்தி நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டம்..! – அம்பாறை ஊடக மாநாட்டில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு
இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதிய ளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி அதனை பெறுவதற்காக பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி நாளை செவ்வாய்கிழமை (09) சுகயீன லீவு போராட்டத்தில் குதிக்கவுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் இன்று (08) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
இங்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம். எஸ். சத்தார், ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை இணைப்பாளர் ஏ.சியாம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலைய செயலாளர் எம்.எஸ்.எம். சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலைய இணைப்பாளர் ஏ.எம்.எம். ஸாகிர் ஆகியோரும் கலந்துகொண்டு இங்கு கருத்து வெளியிட்டனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஏ. ஆதம்பாவா,
நாளை 09.07.2024 நாடு முழுவதும் சுகயீன லீவுப் போராட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு எனக்கு வேண்டும்.
இதற்காக முழு நாட்டிலுமுள்ள அனைத்து கல்வி வலையங்களிலும் உள்ள அதிபர் ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை கடந்த காலங்களில் எமது போராட்டங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பூரண ஒத்துழைப்பு கிடைத்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அதிபர் ஆசிரியர்களும் நாளை பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தலைமையில் நடத்திய போராட்டங்களின் விளைவாக 1997 ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த ஆசிரியர் அதிபர் சம்பள வேறுபாட்டில் 1/3 பங்கை வென்றெடுக்க முடிந்தது. என்றாலும் சுபோதானி சம்பளக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் உள்ளடங்கிய சம்பளத்தில் மேலும் 2/3 பங்கு எமக்கு எஞ்சியுள்ளது. எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நாம், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியாளர்கள் வழியமைக்காமல் எமது நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். தவறும் போது, தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம். இதனால் நாட்டில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஆட்சியாளர்கள் முகம் கொடுக்க வேண்டி வரலாம் என்றும் குறிப்பிட்டார்.
(எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்)