உள்நாடு

மறைந்த எஸ். முத்துமீரான் ஒரு பன்முக ஆளுமை..! -அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் பன்முக ஆளுமையாக விளங்கிய மறைந்த சட்டத்தரணி எஸ். முத்துமீரான்,கல்வி,சட்டம் சார்ந்த துறைகளிலும் கூட பாரிய பங்களிப்பை செய்த திருப்தியில் இவ்வுலகையை விட்டுப் பிரிந்திருக்கிறார் என்றும் அவரது படைப்புக்கள் அனைத்திலும் இளம் சந்ததியினருக்கும் அரிய படிப்பினைகள் பொதிந்துள்ளனவென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாக ரவூப் ஹக்கீம் அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கிலங்கையில், குறிப்பாக நாட்டின் தென்கிழக்கில், அம்பாறை மாவட்டத்தில், நில வளமும் நீர் வளமும் மிக்க நிந்தவூரில் பிறந்து மண்வாசனை கமழும் வண்ணம் தமது ஆக்கங்களைப் படைத்தளித்தவராக
நண்பர் முத்துமீரான் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

இலங்கையில் மட்டுமல்லாது, கடல் கடந்து, தமிழகத்திலும் கேரளத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற நாடுகள் பலவற்றிலும் அவர்
தமது எழுத்துக்களின் வலிமையினாலும்,வீரியத்தினாலும் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

எங்களது இளமைக் காலத்தில் ,பொலன்னறுவை தம்பாளையில் எங்கள் தந்தையார் கடமையாற்றிய காலத்தில் இருந்தே அங்கு ஆசிரியராக அவர் எங்களுக்கு அறிமுகமாகி யிருந்தார் .அன்று தொட்டு இன்று வரை அவரது ஆக்கங்கள் என்றால் ,அவை சிறுகதையாக , உருவகக் கதையாக,கவிதையாக, கட்டுரையாக,நாடகமாக ,நாட்டார் பாடலாக எவையாயினும் அவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கின்றோம்.

கிழக்கிலங்கைக்கு அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு உரித்தான நாட்டார் பாடல் இலக்கியத்தை ஆய்வு செய்து,அவை அருகி வரும் காலத்தில் அவற்றை தனித்துவமான ஒரு கலை வடிவமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல்யப்படுத்துவதில் முத்துமீரான் போன்ற மிகச் சிலரே முன் நின்றனர்.

தன் உயிரோடு ஊறிப் போயிருந்த இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு அப்பால் ஆசிரியர் பணியை சிறப்பாக ஆற்றிவிட்டு, சட்டத்துறையிலும் பிரவேசித்து சிரேஷ்ட சட்டத்தரணியாக பிரகாசித்த ஒருவராகவும் நாங்கள் நண்பர் முத்துமீரானைக் காண்கிறோம் .

எங்களது மறைந்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களால் அரவணைக்கப்பட்டவர்களில் ஒருவராக நண்பர் முத்துமீரானும் இருந்திருக்கிறார். 1997 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் நடந்த தேசிய மீலாத் விழாவின் வெற்றிக்கு அவர் வழங்கிய பங்களிப்பு மறைந்த தலைவரின் மனதைக் கவர்ந்திருந்தது. அவரது அமைச்சு இணைப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் தலைவரின் அழைப்பை ஏற்று பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் ஒரு வேட்பாளராக களம் இறங்கியிருந்தார்.

இலக்கியத்திலும், கல்விப் பின்புலத்திலும், சட்டத்துறையிலும் செல்வாக்குச் செலுத்தி தான் பிறந்த நிந்தவூருக்கு புகழீட்டிக் கொடுத்த மண்ணின் மைந்தர் நண்பர் முத்துமீரானுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்குவானாக. அவரது பிரிவுத் துயரினால் வருந்துகின்ற குடும்பத்தினருக்கு எனதும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து மட்ட உறுப்பினர்களினதும்ஆழ்ந்த அனுதாபங்களைத்c தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *