புத்தளம் வலய உதைப்பந்தாட்ட சம்பியனானது கல்பிட்டி அல் அக்ஸா
20 வயதிற்குற்பட்ட புத்தள வலயமட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பலமிக்க புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியை 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியது.
இலங்கை பூராகவும் இடம்பெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கோட்ட மட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருக்க தற்சமயம் வலய மட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக புத்தளம் வலய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் இவ்வாரம் இடம்பெற்றிருந்தது.
அதிலும் குறிப்பாக 20 வயதிற்குற்பட்ட ஆண்களுக்காக உதைப்பந்தாட்டத் தொடர் நேற்று (4) மற்றும் இன்று (5) ஆகிய இரு தினங்களில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டிகள் புத்தளம் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் மொத்தம் 8 பாடசாலைகளின் அணிகள் பங்கேற்ற புத்தளம் வலய மட்ட போட்டியில் முதல் சுற்று மற்றும் காலிறுதி ஆகிய இரு போட்டியிலும் இலகு வெற்றியைப் பதிவு செய்த கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்றைய தினம் (5) இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பலமிக்க கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியின் முழு நேர ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல்களை உட்செலுத்தாமல் போக போட்டி சமநிலை பெற்றது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி உதை வழங்கப்பட அதில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 4:2 என்ற பெனால்டி கோல்களின் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது. மறுபக்கத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதற்கமைய இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணியும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இதன் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் விட்க் கொடுப்பின்றி கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் இரு அணிகளாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போக முதல் பாதி கோலின்றி சமநிலை பெற்றது.
பின்னர் தொடர்ந்த தீர்மானமிக்க 2ஆது பாதியில் வீரர்களின் ஆட்டம் மேலும் ஆக்ரோசமிக்கதாக மாற இறுதித் தருவாயில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி முதல் கோலை உட்செலுத்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் சாஹிரா தேசிய பாடசாலை வீரர்களால் பதில் கோலை அடிக்க முடியாமல் போக போட்டியின் முழு நேர ஆட்டம் நிறைக்கு வர கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் பலமிக்க புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி புத்தளம் வலயத்தின் சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தியது.
(அரபாத் பஹர்தீன்)