நாடறிந்த எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் காலமானார்..!
நிந்தவூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், உருவகக் கதை எழுத்தாளர், நூலாசிரியர் – சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான் காலமானார்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதற் தொகுதியான ‘உருவகக் கதைகள்’ நூல் தென்னிந்தியா கூத்தா நல்லூர் தென்றல் மன்றத்தினால் 25.02.1982ஆம் ஆண்டு கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனால் வெளியிடப்பட்டது.
இவர் இருநூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், பல நூறு கவிதைகளையும் எழுதியுள்ளார்.
அத்தோடு இவர் நாட்டார் இலக்கியங்களை ஆய்வு செய்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டு வந்த நிலையிலேயே சட்டக் கல்லூரி பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்துறையில் கற்றலை மேற்கொண்டு சட்டத்தரணியாக தொழில் புரிந்தார்.
இவர் நிந்தவூர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவராகவும் இருந்து ஊருக்கு சேவையாற்றியுள்ளார்.
இவர் நிந்தவூர் மண்ணுக்கு பெரும் புகழை இலக்கியத்துறையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியா– தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்கள், அரசியல்வாதிகளுடன், இலக்கியவாதிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனது அரசியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஊக்கமளித்து, ஆலோசனைகளை வழங்கிய ஒருவராகவும் திகழ்கின்றார்.
(எம்.சஹாப்தீன்)