உள்நாடு

மொனரா செய்தி தொடர்பாக அலி சப்ரி எம்.பீ யின் மறுப்பு..!

நேற்றைய 04/07/2024 ஆம் திகதி, வியாழக்கிழமை, மொனரா சிங்கள செய்தி நாளிதழில் தான் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எதிர்வரும் 07/07/2024 அன்று மரிச்சுக்கட்டி – மன்னார் பாதையை இறப்பதற்கு முயற்சிப்பதாக ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேற்படி பத்திரிகையில் போடப்பட்டுள்ள இந்த செய்திக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

அத்தோடு மரிச்சுக்கட்டி பாதையின் ஊடாக பயணிப்பதற்கான எவ்விதமான தடை உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. மரிச்சுக்கட்டி மன்னார் பாதை அமைப்பதற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவே காணப்படுகின்றதாகவே அறிந்துள்ளேன், கடந்த பத்து வருடங்களாக இப்பாதையின் ஊடாக போக்குவரத்துகள் இடம் பெற்று வருகின்றன. கலா ஓயா பாலம் பழுதடைந்ததன் காரணமாகவே இப்பாதையின் ஊடாக போக்குவரத்துகள் தடைபட்டுள்ளன.

நான் புத்தளம் பஸ் போக்குவரத்து சபையிடம் புத்தளத்திலிருந்து எழுவன்குளம் கலா ஓயா பாலம் வரை பஸ்சேவையை வழங்குமாறு எழுத்து மூலமாக கோரிக்கை வைத்துள்ளேன். அதேபோன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்கள் மன்னாரில் இருந்து எழுவன்குளம் கலா ஓயா பாலம் வரையான பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன் காலை ஏழு முப்பது மணிக்கு மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் இப்பாதையை காலை 6.30 இற்கு திறந்து விடுமாறும் வனவிலங்குகள் திணைக்களத்திடம் நான் அரசின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளேன்.

நான் நீதிமன்ற தடை உத்தரவை மீறி மரிச்சுக்கட்டி மன்னார் பாதையை திறப்பதற்கு முயற்சிக்கிறேன் என்ற செய்தி அபத்தமானதும், உண்மைக்கு புறம்பானதுமாகும். எனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள இந்த செய்திப்பத்திரிகைக்கும், செய்தி ஆசிரியருக்கும் எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எனது சட்டத்துரணிகளுடன் ஆலோசித்து வருகிறேன். இது போன்ற எனக்கு எதிரான பொய் வதந்திகளையும், அரசியல் சூழ்ச்சிகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

 

(அலி சப்ரி ரஹீம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *