மூதூரின் முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த றஸீம் பாத்திமா றொஷானா ..!
மூதூர் ஆனைச்சேனையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது ஆலிம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட றசீம் பாத்திமா றொஷானா இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை மூதூர் அறபா நகர் வித்தியாலயத்திலும் மூதூர் அல் – ஹிதாயா மகா வித்தியாலயம்,.மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியையும், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலும் கல்வி கற்ற இவர் பொது நிர்வாகத்தில் இளமானி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட அதிபர் சேவையைச் சேர்ந்த கே.றசீம் மற்றும் மாஹிலா தம்பதிகளின் மூத்த மகளான இவர் மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகம்மது சப்றி முகம்மது சியா என்பவரின் மனைவியும் ஆவார்.
மூதூர் பிரதேச சபை, மூதூர் வலயக் கல்வி அலுவலகம், சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் 10 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்த இவர் தற்பொழுது மூதூர் பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
றஸீம் பாத்திமா றொஷானா அண்மையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், மூதூரிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக அமைந்து சாதனை படைத்துள்ளார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)