உள்நாடு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் வடமேல் மாகாணம்; ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் இன் புதிய இலக்கு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் மாகாணமாக வடமேல் மாகாணத்தைக் கட்டி எழுப்புவதே தனது நோக்கம் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

வடமேல் மாகாணத்தின் கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் , இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் மத்தியில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தான் வடமேல் மாகாணம் அமைந்துள்ளது. நிலவளம் மட்டுமன்றி, கடல்வளம், நீண்ட கடற்கரை என்பனவும் எமது மாகாணத்தில் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பொருத்தமான திட்டங்கள் வரையப்பட்டால் வளம் கொழிக்கும் மாகாணமாக இதனை அபிவிருத்தி செய்யலாம்.

முதற்கட்டமாக குருநாகல் மாநகரின் தோற்றத்தை அழகுபடுத்தி, அதற்கான முகப்புப்பெறுமதியொன்றை உருவாக்க வேண்டும். மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தீம் பார்க், தகவல் தொழில்நுட்ப பூங்கா, கேபிள் கார் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட வேண்டும். முக்கிய நகரமான குருநாகல் நகரம் இரவுநேர வர்த்தக மையமாக மாற்றப்பட வேண்டும். அதேநேரம் பல்வேறு மருத்துவ வசதிகளை மேம்பட்ட வகையில் வழங்கக் கூடிய ஹெல்த் சிட்டியாகவும் இந்த நகரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக பொருத்தமான இடங்களில் கைத்தொழில் பேட்டைகள், முதலீட்டு வலயங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா போன்றவை நிறுவப்படவேண்டும். நட்சத்திர விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் கணிசமான முதலீட்டாளர்களை மாகாணத்தை நோக்கி ஈர்த்தெடுக்க முடியும்.

அதேநேரம் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான, சுற்றுலாத் துறையை வடமேல் மாகாணத்தில் அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான சகல வளங்களும் இங்கு காணப்படுகின்றது. அதனை உரிய முறையில் பயன்படுத்தினால் சுற்றுலாத்துறை மூலம் மாகாணத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

மாகாணத்தை முன்னேற்றுவது தொடர்பில் நவீன உலகத்துடன் ஒன்றிப்போகும் வகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.

வளம் கொழிக்கும் வயம்ப ( வடமேல் மாகாணம்) என்பதே எனது பிரதான இலக்காகும். அதற்காக சுற்றுலா, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தையும், அபிவிருத்திக்கான முன்னெடுப்புகளையும் அதற்குப் பொருத்தமான முறையில் முன்னெடுப்பதே எனது இலக்காகும். மாகாண அதிகாரிகள் அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மாகாணத்தின், பொதுமக்களின் மேம்பாடு கருதி தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தொடர்ந்தும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வடமேல் மாகாண பிரதம செயலாளர் மற்றும் கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் தலைவர் தீபிகா கே குணரத்தின,கைத்தொழில் சேவைகள் மன்ற பணிப்பாளரும், பிரதான அமைச்சின் செயலாளருமான நயனா காரியவசம், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமந்த அபேவிக்கிரம, வடமேல் மாகாணக் கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நீலகாந்த் வன்னிநாயக்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஜே.எம்.சி. ஆர். ஜயசிங்க, டொக்டர் யு. அனுரகுமார, டீ.கே.ஆர்.தெல்கொட, டொக்டர் சுரவீர, மகேஷ் விஜேரத்தின உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *