இந்த நாட்டின் கல்விப் பணிகளுக்கு குவைத் அரசு பாரிய பங்களிப்புச் செய்கிறது; கலகெதர நிகழ்வில் பிர்தெளஸ் நளீமி
பாதுக்க கலகெதர முஸ்லிம் வித்தியாலயத்திற்கு குவைத் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் நிறுவனத்தின் ஊடாக இரண்டு மாடி வகுப்புகளுக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் கல்லுாாியின் அதிபர் எம்.எம்.எம். நவாஸ் தலைமையில் கல்லுாாியில் 29.06.2024 நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு குவைத் தூதுவரின் பிரதிநிதியாக கொழும்பில் உள்ள குவைத் தூதுவராலயத்தின் அதிகாரி அஷ்சேக் எம்.பிர்தௌஸ் (நளிமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அஷ்ஷேக் பிர்தௌஸ் நளிம உரையாற்றுகையில், “குவைத் அரசாங்கம் இலங்கைக்கு பாரிய அளவில் உதவிகளைச் செய்து வருகின்றது. மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகம், குவைத் வீடமைப்பு திட்டங்கள், குவைத் மருத்துவ நிலையங்கள மட்டும் அல்ல 40க்கும் மேற்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் இவ்வாறான 1மாடி அல்லது 2மாடி வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடங்களை நிர்மாணித்து இந்த நாட்டின் வாழ் கல்விச் சமுகத்திற்கு உதவி செய்து வருகின்றது.
எமது நாட்டின் பொருளாதாரத்தின் சக்தியாக எமது நாட்டவர்கள் குவைத் நாட்டுக்குச் சென்று அங்கு தொழில் செய்து அந்நிய நாட்டுச் செலவானியை உழைத்து எமது நாட்டுக்கு அனுப்புகின்றனர். குவைத்தில் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட் இலங்கையர்கள் குவைத் நாட்டில் தொழில் செய்கின்றனர்.
ஆகவே தான் நாம் குவைத் துாதுவர் மற்றும் அந்த நாட்டின் அரசாங்கம், குவைத் உதவி புரியும் அமைப்புகளுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். என பிர்தௌஸ் அங்கு உரையாற்றினார்.
(அஷ்ரப் ஏ சமத்)