உள்நாடு

அஷ்ஷெய்க் மௌலவி பைஸர் எம் அலியார் (காஸிமி மதனி) அவர்களுக்கு வழங்கப்பட்ட MAN OF NATION 2024  கௌரவத்தினால் பெருமை கொள்ளும் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள்..!

மொஹமட் அலியார் பைசர் (காஸிமி,மதனி) அவர்கள் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியின் அல்ஆலிம் பட்டத்தை நிறைவு செய்து, மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, யாழ் மண்ணின் முதல் ஆலிம் ஆவார். சமூகத்தில் பல்துறைசார் சேவைகளை ஆற்றிவரும் மிகச்சிறந்த ஓர் ஆளுமை பற்றிய சுருக்கமான பார்வையே இது …..

கல்வித் துறை ..

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்லாம் பாட மௌலவி ஆசிரியராகக் கடமையாற்றியதுடன், தற்போது சுமார் ஒன்றறை வருடங்களாக யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட மௌலவி ஆசிரியராக தனது ஆசிரியப் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

மேலும் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரியில் இஸ்லாம் பாட வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவர் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பல வருடங்களாக ஆசிரிய மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தை போதித்த சிறந்த ஆசான்களில் ஒருவராவார்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவப் பிரதிநிதிகளுடன் இணைந்து தேவையான சந்தர்ப்பங்களில் கல்விசார் நடவடிக்கைகளில் உதவிவருவதுடன், விசேடமாக நோன்பு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் விசேட பயான் மற்றும் இப்தார் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குபவர்.

இஸ்லாமிய மார்க்க அழைப்பாளராக..

சவுதி அரேபியா மதீனாவில் பட்டம் பெற்ற அவர் யாழ்ப்பாணத்தில் சுமார் 14 வருடங்களாக தனது முதன்மையான சமூகக் கடமையாக மார்க்கப் போதனைகளை முன்வைத்து வருகின்றார். குர்ஆன், சுன்னா இவை இரண்டையும் மக்கள் மயப்படுத்துவதிலும், அதன் பால் மக்களுக்கு வழிகாட்டுவதிலும் பல்வேறு வழிவகைகளில் செயற்பட்டு வருவதுடன், பல மௌட்டீக சிந்தனை, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

“மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்” மற்றும் “யாழ் இஸ்லாமிய வழிகாட்டல் மையம்”  ஊடாக பல்வேறு மார்க்க மற்றும் சமூக மட்ட முன்னெடுப்புக்களை திறம்பட முன்னெடுத்துவருகின்றார். நோன்பு காலங்களில் மாணவர்களுக்கு விசேட மார்க்க வகுப்புக்களை நடாத்தி மார்க்கப் பற்றுள்ள ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து, யாழ்ப்பாணம் மீள் குடியேற்ற மண்ணில் பல உயர் கல்வி மாணவர்களின் உயர்ச்சிக்கு பின்புலமாகவும் இருந்து வருகின்றார்.

சமூக நல்லிணக்க முன்னெடுப்புக்கள்…

தமிழ் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைப்பதிலும், தமிழ் பேசும் மக்களாக வடக்கில் நாம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதிலும் விலகியிறுக்கவில்லை. தமிழ் மக்களுடன்  சந்திப்புக்களை ஏற்படுத்தக் கூடிய எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்திற்காக யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளதுடன், இஸ்லாம் கூறும் நல்லிணக்கமான, “கரைந்து போகாமல் கலந்து வாழ்ந்து” அல்குர்ஆன் – சுன்னா ஒளியில் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறி சமூக நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் ஒரு சமூக ஜோதியாக வளம்வருகிறார்.

குறிப்பாக றமழான் கால அரச மற்றும் கல்விப் புலத்தில் இடம்பெறும் விசேட இப்தார் நிகழ்வுகளை நல்லிணக்க முயற்சிகளுக்கான தளமாகக் கொண்டு இரு சமூகங்களினதும் ஐக்கியத்தை வலியுறுத்திவரும் ஓர் சமூக சிந்தனையாளரும் ஆவார்.

அரச அலுவலகங்கள், அதிகாரிகள், அரச தலைவர்களுடனான சந்திப்பு, தொடர்பு….

குறிப்பாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சு, பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி, முக்கிய அரச திணைக்களங்கள், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு  பிரிவினர் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் முஸ்லிம் சமூகம் சார்பாக , முக்கிய நிகழ்வுகளில் தனது உருக்கமான உரைகளை நிகழ்த்தி, நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில்  சமூகம் சார்பில் உலமாக்களை பிரதிநிதித்துவம் செய்து தவறாது பங்கெடுத்து வரும் இவர், முக்கிய அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தருகின்ற போது சமூகம் சார்பில் வரவேற்றல், சமூகத்தின் தேவைகளை வெளிக்கொணர்தல் உள்ளிட்டவற்றில் தனது அர்ப்பணிப்பான சேவைகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

மீள்குடியேற்றம் சார்ந்த ஈடுபாடு…..

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் பூர்வீகம், மீள்குடியேற்றம் சார்ந்த பல்வேறுபட்ட சமூக விவகாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இஸ்லாமிய NGO கள் மற்றும் அரபு நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வருகின்றமை யும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

துணிச்சல்மிக்க மனித உரிமை ஆர்வலர் …..

இலங்கை திருநாட்டின் அண்மைய ஆண்டுகளில் சமயத்தின் சாயம் பூசி மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களின் போதும், முஸ்லிம் ஜனாசாக்கள் COVID 19 காரணத்திற்காக அனியாயமாக எரியூட்டப்பட்ட போதும், ஸியோனிச இஸ்ரேலின் அப்பாவி முஸ்லிம்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து பல அமைதிப் பேரணிகளையும் தனித்து நின்று நடாத்திய துணிச்சலுக்கு சொந்தக்காரன்.

மேற்படி மார்க்கம், கல்வி, கலாசாரம், நல்லிணக்கம், அரச திணைக்களம் மற்றும் அரசியல் தலைவர்களுடனான தொடர்பு மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்துறைசார் வேலைத்திட்டங்கள் ஊடாக தனது சமூக சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் மௌலவி எம்.ஏ.பைசர் (காஸிமி, மதனி ) அவர்கள் உண்மையிலேயே சிறந்த சமூக சேவையாளராகவும், சமூக ஆர்வலராகவும் தனது ஆசிரியர் பணிக்கு அப்பால் செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

ஏலவே 1990 ஆண்டு காலப்பகுதியில் இவரது தந்தை மர்ஹூம் இஸ்மாயீல் லெப்பை முஹம்மது அலியார் குர்ஆன் மத்ரஸா முஅல்லிமாகவும், சிறந்த முஅத்தினாகவும் ஜனாசாவுக்குறிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதில் மிகச்சிறந்த சமூக சேவையாளாராகம் திகழ்ந்தது யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் வரலாற்று பக்கங்களின் சிறப்பம்சமாகும்.

அஷ்ஷெய்க் faizer M Aliyar அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி கடந்த 2024.06.29 ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்ற சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் International HUMAN RIGHTS Global Mission And Global Asian Achievers Council  நிறுவனத்தினால் MAN OF  NATION 2024  விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி MAN OF  NATION 2024  விருதைப் பெற்றுக் கொண்ட மௌலவி எம்.ஏ.பைசர் (காஸிமி, மதனி) அவர்களுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகமும் தமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *