உள்நாடு

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும், குடிநீர் விநியோக ஆரம்பமும்

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல் மற்றும் குடிநீர் விநியோகம் அங்குரார்ப்பணம் என்பன அண்மையில் (02) பாடசாலையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எச்.யூ.எம்.எஹியா தலைமையில் நடைபெற்ற இநிகழ்வில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பான பல்ஸ்ட் அமைப்பை சேர்ந்த எஸ்.எம். முஹம்மத் மபாஸ் மற்றும் எம்.டீ. றினாஸ் முஹம்மத், பாடசாலை நிகழ்வுகளின் அறிவிப்பு துறைக்கு பங்களிப்பு நல்கி வரும் எம்.ஆர்.எம்.ஷவ்வாப், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் செயலாளர் முஹம்மது நளீம் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பல்ஸ்ட் அமைப்பினால் கடந்த ஆறு வருடங்களாக “Food For Needy” எனும் செயற்திட்டம் மூலம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் தேவையுடைய மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான செலவீனங்கள் முழுவதும் பல்ஸ்ட் அமைப்பை சேர்ந்த நண்பர்களால் இறை திருப்தியை நோக்காகக் கொண்டு வழங்கப்படும் நன்கொடைகளாகும்.

இவ்வருடத்துக்கான சிரேஷ்ட மாணவ தலைவியாக எம்.என்.அய்தா செய்ன் தெரிவு செய்யப்பட்டதோடு, 06 உப சிரேஷ்ட மாணவ தலைவர்களோடு மொத்தமாக 40 மாணவ தலைவர்கள் இதன் போது அதிபர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொடண்டனர். இவர்களுக்கான பதக்கங்களும் அதிதிகளினால் அணிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமகாலத்தில் பாடசாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரு நீர் தாங்கிகளிலிருந்து நீர் விநியோக திட்டமும் அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகரில் சமூக சேவையாற்றிய காலஞ்சென்ற கிராம உத்தியோகத்தர் ஹசன் அவர்களது உறவினர்களால் ஒரு நீர் தாங்கியும், மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின்
பெற்றோர்களினால் மற்றுமோரு நீர் தாங்கியும் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *