உள்நாடு

“தமிழ் தேசியம் விலைபோகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன்; சம்பந்தன் ஐயாவின் வழிகாட்டல்களில் சமதானத்துக்கான கதவுகள் திறந்திருந்தன..!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

தமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து, சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த மிதவாத தலைவர் சம்பந்தன் ஐயா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் ஐயாவின் மறைவையிட்டு அவர் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“விடுதலை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களை சமபார்வையுடன் நோக்கிய தலைவர் சம்பந்தன் ஐயா. நீண்ட அரசியல் வரலாற்றனுபவமுள்ள இவர், தமிழ் தேசிய அரசியலை மிகச்சாதுர்யமாக வழிநடத்தினார்.
ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களில்கூட தமிழ்த்தேசிய அரசியல் விலைபோகாமல் பாதுகாக்கப்பபட்டது. தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது.
ஒரே வாழிடத்தில் ஒரே மொழி பேசுவோராக வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்களை, சம பார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான். தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாதென்பதற்காக முஸ்லிம் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணி வந்தார். இன்று வரைக்கும் தீர்க்கப்படாதுள்ள தமிழ், முஸ்லிம் அபிப்பிராய பேதங்களைப் போக்குவதற்கு சம்பந்தன் போன்ற தலைமைகளே அவசியம்.
காலம் சென்ற சம்பந்தன் ஐயாவின் கடந்தகால வரலாறுகளிலிருந்து ஒற்றுமைக்கான பல படிப்பினைகளை நான் காண்கிறேன். இவரது வழிகாட்டல்களில் சமாதானத்துக்கான கதவுகள் திறந்தேயிருந்தன. உரிமை அரசியல் விலைபோகக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த அரிய பல வாய்ப்புக்களையும் அவர் தியாகம் செய்திருந்தார்.
இனிவருங்காலங்களில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு தீட்சண்யமான தலைமை தமிழருக்கு அவசியம். இந்தத் தலைமைகளுடன்தான் முஸ்லிம் தலைமைகளும் இணக்கப்பாட்டுக்கு வர முடியும்.
அன்னாரின் இழப்பால் துயருறும் சகலருக்கும் ஆண்டவனின் அருட்கடாட்சம் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *