5ஆவது LPL – 2024. சானக்கவின் சகலதுறை அசத்தலால் தம்புள்ளையை வீழ்த்தியது கண்டி
5ஆவது லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் தசுன் சானக்கிவின் சகலதுறை அசத்தலால் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது கண்டி பொல்கோன்ஸ் அணி.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பித்த லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் 5ஆது அத்தியாயத்தின் முதல் போட்டி கந்த முறை சம்பியன் மகுடம் வென்ற அணித்தலைவரான வனிந்து ஹசரங்க தலைமையிலான கண்டி பொல்கோன்ஸ் அணிக்கும் முஹம்மத் நபி தலைமையிலான தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்குமிடையில் பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பொல்கோன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய களம் நுழைந்த தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணத்திலக்க 11 ஓட்டத்துடனும், குசல் ஜனித் பெரேரா ஓட்டமின்றியும், 3ஆம் இலக்க வீரரான நுனிந்து பெர்னான்டோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தவ்ஹீட் ஹரிடோய் 1 ஓட்டத்துடனும் பெவிலியன் திரும்ப தம்புள்ள அணி 25 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது.
இந்நிலையில் 5ஆவது விக்கெட்டில் இணைந்த நியூஸிலாந்து வீரரான மார்க் சப்மேன் மற்றும் இளம் வீரரான சமிந்து விக்ரமசிங்க ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இவ்விருவரும் தத்தமது அரைச்சதங்களை கடந்து 5 ஆது விக்கெட்டில் பிரிக்கப்படாத 154 ஓட்டங்களைப் பகிர தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மார்க் சப்மேன் மற்றும் சமிந்து ஆகியோர் முறையே 91 மற்றும் 62 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தனர். பந்துவீச்சில் தசுன் சானக்க 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் 180 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை விரட்டக் களம் நுழைந்த கண்டி பொல்கோன்ஸ் அணிக்கு ஆரம்ப வீரரான பிளச்சர் நுவன் துஷாரவின் பந்தில் டக்அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து ந்த முஹம்மட் ஹாரிஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றைய ஆரம்ப வீரரான தினேஸ் சந்திமால் அதிரடி காட்ட மறுபக்கத்தில் இருந்த கமிந்து மென்டிஸ் 27 ஓட்டங்களுடன் பெவிலியன் நடந்தார். அதிரடியைத் தொடர்ந்த சந்திமால் அரைச்சதம் கடந்து 65 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பின்னர் 5ஆவது விக்கெட்டில் இணைந்து கொண்ட அனுபவ வீரர்களான மெத்யூஸ் மற்றும் தசுன் சானக்க ஜோடி பந்துகளை பௌண்ரி எல்லைக்கு விரட்டியடிக்க 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த கண்டி பொல்கோன்ஸ் அணி 183 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது. மெத்யூஸ் மற்றும் சானக்க ஆகியோர் முறையே 37 மற்றும் 46 ஓட்டங்களை விளாசியிருந்தனர். பந்துவீச்சில் 4 பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் நாயகனாக சகலதுறையில் அசத்திய தசுன் சானக்க தெரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)