உள்நாடு

விளையாட்டத் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாஜகான் கௌரவிப்பு

கஹட்டோவிட்டவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சிராஜ் எம் ஷாஜகான் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போறத்தின் 27 ஆவது மாநாட்டில் வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கஹட்டோவிட அல் பத்ரியாவின் பழைய மாணவரான இவர் ஊரின் முதலாவது கிரிக்கெட் கழகமான Beta ( Rock Star ) அணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார்.

1995ம் ஆண்டு காலப்பகுதியில் அத்தனகல்ல தொகுதி தினகரன் நிருபராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த இவர் விளையாட்டு சம்பந்தமான ஊடக துறையில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்தார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தினசரிப் பத்திரிகையில் ஒரு விளையாட்டு பக்கத்தை உருவாக்கி அதற்கு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

தினகரன் பத்திரிகையில் இந்த விளையாட்டு பக்கம் ஆரம்பிப்பதற்கு முன் இலங்கையில் எந்தவொருதமிழ் தினசரிப் பத்திரிகையிலும் விளையாட்டுக்கு என்று தனி ஒரு பக்கம் இருக்கவில்லை. இவரின் முயற்சியால் இந்த விளையாட்டு பக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின் தினகரன் பத்திரிகை விற்பனையில் பாரிய முன்னேற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தினகரன் பத்திரிகையின் விளையாட்டு எடிட்டர் என்ற பதவிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான உள்ளூர் சர்வதேச விளையாட்டு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1999 ஆம் ஆண்டு நேபாளம் காத்மண்டுவில் நடந்த தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் உத்தியோகபூர்வ செய்தி சேகரிப்பாளராக தனது சர்வதேச செய்தி சேகரிப்பு பணியை ஆரம்பித்த இவர் பாகிஸ்தான் இந்தியா இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்து தெற்காசிய மற்றும் ஆசிய மெய்வள்ளுநர் போட்டிகள், இலங்கை தேசிய கிரிக்கெட், தேசிய கால்பந்து, டென்னிஸ் உட்பட பல விளையாட்டுப் போட்டிகளிலும் உத்தியோகபூர்வ செய்தி சேகரிப்பாளராக கடமையாற்றி உள்ளார்.

தினகரன் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் நவமணி பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பதவி வகித்து தற்போது உதயம் பத்திரிகையின் பிரதான செய்தி ஆசிரியராக கடமையாற்றுகிறார்.

அன்னாரின் விளையாட்டு ஊடகத்துறையில் இருந்த ஈடுபாடும் அனுபவமும் கஹாட்டோவிட மண்ணில் நெறிப்படுத்தப்பட்ட விளையாட்டு கழகங்கள் உருவாவதற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கும் நேரடியாகவும் சில நேரம் பின்புலத்தில் இருந்தும் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

 

(அப்ஹம் நிஸாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *