உள்நாடு

பலஸ்தீன் மக்கள் மீதான அராஜகத்தை இஸ்ரேல் உடன் நிறுத்த வேண்டும்..! -பேருவளை நிகழ்வில் சஜித் வேண்டுகோள்.

பலஸ்தீன் நாட்டில் அப்பாவி மக்களை கொத்து கொத்தாக அநியாயமாக படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசின் அரச பயங்கரவாதத்தை பென்ஜமின் நெதன்யாகு நிறுத்த வேண்டும் என வரலாற்றுப்புகழ்மிகு பேருவளை நகரில் இருந்து வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

இஸ்ரேலின் அராஜகத்தை நாம் கண்டிப்பதோடு சுதந்திர பலஸ்தீன் உருவாகி அங்கு வாழ் மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என்றும் அவர் கூறினார்.

பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலய டிஜிட்டல் வகுப்பறை திறப்பு விழாவில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்லூரி அஷ் செய்ஹ் முஸ்தபா ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிபர் எஸ்.ஏ.குமார் தலைமை வகித்தார்.

பேருவளை ஐ.ம.சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜமீலின் வேண்டுகோளின் பேரில் இந்த டிஜிட்டல் வகுப்பறை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இப்பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு க.பொ.த.உயர்தர பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் நான்காம் இடத்தையும் மேல் மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று வைத்தியத்துறைக்கு பல்கலைக் கழகம் செல்லவுள்ள மாணவி பாத்திமா நிஹ்லாவுக்கு ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் தளைவர் டாக்டர் ரூமி ஹாஷிம் 50,000 ரூபாவையும் வழங்கினார்.மேலும் வைத்தியத்துறைக்கு பல்கலைக் கழகம் வாய்ப்பு கிட்டியுள்ள ஐந்து மாணவிகளுக்கு தலா 10,000 ரூபாய் வீதமும் அவரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் மேலும் கூறியதாவது- பேருவளை தொகுதியில் முதல் தடவையாக இரு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வகுப்பறை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.இன்னும் பல பாடசாலைகளிலிருந்து இவ்வாறான வகுப்பறை,பஸ் வண்டி கேட்டு எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பேருவளையில் உள்ள இன்னும் பல பாடசாலைகளுக்கும் இப்படியான வசதிகளை செய்து கொடுப்பேன்‌.

பேருவளை தொகுதியில் உள்ள 82 கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொறுப்பை கையேற்பேன்.

ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல் தொழில்நுட்ப துறையில் மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்றார்.

ஐ.ம.ச. அமைப்பாளர் இஸ்திகார் ஜமீல் பேசும் போது-
பேருவளைக்கும் ரணசிங்க பிரேமதாஸ குடும்பத்திற்குமிடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.முன்னால் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ செய்த சேவைகளை பேருவளை மக்கள் அதிலும் விசேடமாக முஸ்லிம்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

1991ல் இரு சமூகங்களுக்கிடையில் இடம்பெற்ற சிறிய வன்முறையை தூர நோக்கோடு இயங்கி கட்டுப்படுத்தினார். அப்போதைய பிரதமரான டி.பி.விஜேதுங்கவை விசேட ஹெலிகெப்டரில் பேருவளைக்கு அனுப்பி சமாதானத்தை நிலை நாட்ட பங்களிப்புச் செய்தார் என்றும் அவர் ஞாபகமூட்டினார்.

முன்னாள் எம்.பி.அஸ்லம் ஹாஜியார் அஜித் பெரேரா மாவட்ட அமைப்பாளர் ஏம்.எம்.அம்ஜாத்,ஐ.ம.ச.நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான டொக்டர் ரூமி ஹாஷிம், இபாம் ஹனபி,நகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹசன் பாஸி,பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம்.பதியுத்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *