பாணந்துறையில் கவியரங்கு
பாணந்துறை கவிதா வட்டம் (பாகவம்) பாணந்துறை ஹேனமுல்லையில் கவியரங்கமொன்றை நடாத்தியது. நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இக்கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைதாங்கி நடத்தினார். கலைமதி யாஸீன், மஸீதா அன்ஸார்,லைலா அக்ஸியா, இளமதியன் இல்யாஸ், மஸாஹிறா கனி, முனாஸ் கனி, அஹ்ஸன் அஸ்வர் ஆகிய உள்ளூர்க் கவிஞர்களோடு, சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி, பர்ஹத் ஸித்தீக் ஆகியோரும் கவிதை பாடி சபையோரின் பாராட்டைப் பெற்றனர்.
நாடறிந்த எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் முன்னிலை வகித்தார். கவியரங்கம் பற்றிய தனது கருத்துரையில், பேராசிரியர் ம.மு.உவைஸின் தமிழ்ப் பணியைத் தொட்டுக் காட்டியதோடு, இப்பிரதேசத்தில் இதை விடவும் முனைப்பாக இலக்கிய முயற்சிகள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் காட்டினார்.
நிகழ்ச்சிகளின் இறுதியில், ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட காத்திரமான இலக்கியப் பணிக்காக திக்குவல்லை கமால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் மௌலவி மீராமொகிதீன் சிறப்பதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரறிஞர் ம.மு.உவைஸ், கலைவாதி கலீல், மொய்ன் சமீன், பாணந்துறை நிஸ்வான் முதலாம் இலக்கிய முன்னோடிகளும் நினைவு கூறப்பட்டனர்.
(பேருவலை பீ எம் முக்தார்)