உள்நாடு

நல்லிணக்கத்தை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பு.முதலமைச்சர் நஸீர் அஹமத் அனுதாபம்

தமிழரசுக்கட்சியின் தலைவரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களின் இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமன்றி, நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் பேரிழப்பாகும் என்று வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவு குறித்து வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் அனுதாபச் செய்தியொன்றை விடுத்துள்ளார்

குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தரணியாக அரசியல் களத்திற்குள் நுழைந்த ஆர்.சம்பந்தன் ஐயா அவர்கள், 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து 1977ம் ஆண்டு முதன்முதலாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேசிய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அக்காலப் பகுதியில் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உரிமைக்கான அரசியல் போராட்டங்களை மேற்கொண்டிருந்த காலகட்டமாகும்.

அதன் பின்னர் பல்வேறு கட்டங்களைக் கடந்து தமிழ், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் களங்கள் செயற்பாட்டுக்கு வந்திருந்த நிலையிலும் மறைந்த பெருந்ததலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் ஆர்.சம்பந்தன் போன்றவர்கள் நல்லிணக்க அரசியல் மற்றும் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டிருந்தனர்.

அதன் காரணமாகவே 2102ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் 2015ம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் தெரிவு செய்யப்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்.சம்பந்தன் ஐயா அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கினார்.

தான் சார்ந்த தமிழ் மக்களின் நலன் சார்ந்து சதாவும் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு அரசியல்வாதியாவார். இலங்கையில் தமிழர் உரிமைப் போராட்டத்தின் மூன்றாம் கட்டமான 2009ம் ஆண்டுக்குப் பிந்திய காலகட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல்ரீதியாக வென்றெடுப்பதில் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சர்வதேச களங்களிலும் போராட்டங்களையும், வலியுறுத்தல்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார்.

தனது வாழ்நாளுக்குள்ளாக தமிழர் அரசியல் உரிமைக்கான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டவர். மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதிலும் தீவிர கரிசனையுடன் செயலாற்றியவர். கிழக்கின் முதலமைச்சராக இருந்து நான் மேற்கொண்ட அவ்வாறான போராட்டங்களின் போது பக்கபலமாக செயற்பட்டவர்.

தமிழர் அரசியல் வரலாற்றில் அமிர்தலிங்கம் ஐயா அவர்களின் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த பெருமைக்குரியவராகவும் சம்பந்தன் ஐயா அவர்கள் அழியாத வரலாற்றுத் தடமொன்றை விட்டுச் சென்றுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தார். எந்தவொரு பிரச்சினை அல்லது முக்கியமான சந்தர்ப்பங்களிலும் அவரது நிலைப்பாடுகள் நேர்மையானதாகவே இருந்தது.

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதிலும் அவரது பங்களிப்புகள் பாராட்டத்தக்கவையாகவும், நேர்மையானதாகவும் இருந்தது. அது தொடர்பான பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகனை முன்னெடுத்துள்ளார். கிழக்கில் மட்டுமன்றி வடக்கிலும் இன்று தமிழ்-முஸ்லிம் நல்லுறவு குறிப்பிடத்தக்க அளவில் மீள புத்துயிர் பெற்றிருப்பதற்கு அவரது நேர்மையான அணுகுமுறைகளும் ஒரு காரணம் என்று கூறலாம்.

இலங்கையின் சிறுபான்மை அரசியல்வாதிகளில் சர்வதேச ரீதியாக அறியப்பட்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒருசிலரில் சம்பந்த ஐயா முக்கியமானவர். இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் குரலாக சர்வதேசத்தில் அறியப்பட்டவர். அவரது கருத்துக்கள் எப்போதும் சர்வதேச ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருந்தது.
அவ்வாறான ஒரு அரசியல் தலைவரின் இழப்பு இன்றைய காலகட்டத்தில் ஒரு பாரிய பேரிழப்பாகும்.
சம்பந்தன் ஐயா அவர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் உரிமை சார் அரசியல் போராட்டங்களில் கைகோர்த்துச் செயற்படுவதும், பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் நல்லிணக்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுமே அன்னாருக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.

அன்னாரின் மறைவு தொடர்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *