இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு – 2024
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு “விழுமிய வாழ்வு, வளமிகு நாடு” எனும் கருப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜுன் 29ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்-ஷேய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி தலைமையில் நடைபெற்ற இம்மாநாடு மூன்று அமர்வுகளைக் கொண்டிருந்து. பி.ப 02 மணி முதல் அங்கத்தவர்களுக்கான அமர்வும் 04:30 முதல் 6:30 மணி வரை மூவினப் பிரமுகர்களும் கலந்துகொண்ட பிரமுகர் அமர்வும் மீண்டும், 06:30 முதல் இரவு 08:00 மணி வரை அங்கத்தவர் அமர்வின் இரண்டாம் கட்டமும் இடம்பெற்றது.
பிரமுகர் அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க். நூராமித், தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, வல்பொல ராஹுல நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி கல்கந்தே தம்மானந்த தேரர், சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வின்யா ஆரியரத்ன, பேராதனை பல்கலைக்கழக ஆங்கில துறைப் பேராசிரியர் சுமதி சிவமோகன், தேசிய சமாதான கவுன்சிலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகிய பிரமுகர்களும் எம்.எச்.எம். அஸ்மி, மெளலவியா நஜ்முன் நிஸா ஆகியோரும் உரையாற்றினர். அல்காரீ அஷ்ஷேய்க். எம்.இஸட்.எம். நெளஸர் இஸ்லாஹி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான பிரமுகர் அமர்வின் வரவேற்புரையை ஜமாஅத்தின் நிறைவேற்று நிர்வாக சபை உறுப்பினர், திஹாரிய தன்வீர் அகடமியின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க். எம்.டீ. அப்துர் ரஹ்மான் நளீமி நிகழ்த்த நன்றியுரையை ஜமாஅத்தின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எச்.எம். ஹஸன் நிகழ்த்தினார். சபையோரை விளித்து அஷ்ஷேய்க். அய்யாஷ் ரிழாப் தன்வீரியின்அவர்களின் சிங்கள விரிது பாடலொன்றும் இடம்பெற்றது.
மேலும், ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து பணியாற்றும் தேசிய மட்ட நிறுவனங்களான சர்வோதய சிரமதான இயக்கம், ஹெல்தி லங்கா மற்றும் ஐரிஸ் ஆகிய அமைப்புகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி பற்றிய ஆவணப்படம் ஒன்றும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதோடு எழுபது வருட நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
1500 அங்கத்தவர்களும் 500க்கு மேற்பட்ட பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்தனர்.