9ஆது ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி; விராட் கோஹ்லியின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்கள் இலக்கு
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லியின் பொறுப்பான துடுப்பாட்டமும் , இளம் வீரர்களின் அதிரடியும் கைகொடுக்க 176 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி முதல் முறையாக ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி 10 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.இரு அணிகளும் அரையிறுதி ஆட்டங்களில் பங்கேற்ற அதே பதினொருவரை இப் போட்டியிலும் களமிறக்கியிருந்தது. இதற்கமைய இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் களம் நுழைந்தனர்.
அதற்கமைய தென்னாபிரிக்க சார்பில் முதல் ஓவரை மர்கோ ஜன்சென் வீச கோஹ்லி 3 நான்கு ஓட்டங்களை விளாச அவ் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றது இந்திய அணி. மேலும் 2ஆவது ஓவரை கேசவ் மஹராஜ் பொறுப்பேற்று வீச முதல் இரு பந்துகளில் 4 ஓட்டங்களை விளாசிய ரோஹித் 3ஆவது பந்தில் கிளாசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரிசப் பாண்ட் அவ் ஓவரின் 5ஆது பந்தில் டி கொக்கிடம் பிடி கொடுத்து டக் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் அமைதியாகினர்.
பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 3 ஓட்டங்களுடன் ரபாடரின் வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுக்க இந்திய அணி 34 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது. பின்னர் 4ஆவது விக்கெட்டில் கோஹ்லியுடன் இணைந்த அக்ஷர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோஹ்லி நிதானமாய் ஓட்டங்களைச் சேர்த்தார். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளிய அக்ஷர் பட்டேல் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 47 ஓட்டங்களைப் பெற்றிருக்க துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி 4ஆது விக்கெட்டில் பெருமதியான 72 ஓட்டங்களை பெற்றிருந்தது.
5ஆவது விக்கெட்டிற்காக களத்திலிருந்த விராட் கோஹ்லியுடன் இணைந்த சிவம் டூபே வந்த வேகத்தில் ஆறு , நான்கு என விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகப்படுத்த நிதானம் காட்டிய கோஹ்லி 48 பந்துகளில் அரைச்சதம் பதிவு செய்து நம்பிக்கை கொடுத்தார். அரைச்சதம் கடந்ததன் பின்னர் ரபாடரின் ஓவரில் ஒரு 6 மற்றும் ஒரு 4 ஓட்டங்களை விளாசி அதிரடிக்குத் திரும்பினார் கோஹ்லி. இரு துடுப்பாட் வீரர்களும் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை சுவம்சம் செய்ய ஆட்டம் கண்டது பலமிக்க தென்னாபிரிக்க பந்துவீச்சு வரிசை.
பின்னர் 19ஆவது ஓவரை ஜன்சென் வீச அதன் 2ஆவது பந்தில் 4 ஓட்டத்தையும் 4ஆவது பந்தில் 6 ஓட்டத்தையும் பறக்கவிட்ட கோஹ்லி 5ஆவது பந்தில் பிடிகொடுத்து 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துகளம் நுழைந்த பாண்டியா முதல் பந்தில் 4 ஓட்டத்தை அடித்து மிரட்டினார். 20ஆதும் இறுதியுமான ஓவரில் சிவம் டூபே 4 ஓட்டம் ஒன்றை அடித்து 4ஆவது பந்தில் மில்லரிடம் பிடிகொடுத்து 27 ஓட்டங்களுடன் வெளியேற இறுதிப் பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது இந்திய அணி.
பந்துவீச்சில் மஹராஜ் மற்றம் நேர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். தென்னாபிரிக்க அணி 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரை தனதாக்க வேண்டுமாக இருந்தால் 20 ஓவர்களில் 10 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 177 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)