விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணத்தின் இறுதிச் சமர் இன்று. இந்திய, தென்னாபிரிக்கா அணிகள் களத்தில்.

9ஆவது ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் தீர்மானமிக்க இறுதி ஆட்டத்தில் இதுவரையில் எந்தவித இத் தொடரில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி மாத்திரம் மீதமாய் இருக்க ஏனைய அனைத்துப் போட்டிகளும் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் தாம் சந்தித்த 8 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்து உள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

முதல் சுற்று ஆட்டத்தில் குழு ஏ இல் இடம்பிடித்திருந்த இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் அயர்லாந்து , அமெரிக்கா மற்றும் தமது பரம வைரிகளான பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளைப் பெற்றிருக்க மதமு முதல் சுற்று இறுதி லீக் ஆட்டத்தில் கனடா அணிக்கு எதிரான போட்டி மழையால் கழுவப்பட ஒரு புள்ளி வழங்கப்பட்டமையால் இந்திய அணி மொத்தம் 7 புள்ளிகளுடன் குழு ஏ இல் முதலிடம் பெற்று சுப்பர் 8 சுற்றின் குழு 1 இற்கு தகுதி பெற்றது.

அதேபோல் தென்னாபிரிக்கா அணி முதல் லீக் சுற்றில் டி குழுவில் இடம்பெற்று தமது அசத்தலான பந்துவீச்சின் உதவியால் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் குழு டீ இல் இருந்து முதல் அணியாய் சுப்பர் 8 சுற்றின் குழு 2 இற்குத் தெரிவானது.

பின்னர் சுப்பர் 8 சுற்றில் இந்திய அணி குழு 1இல் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை மிக இலகுவாக வீழ்த்தியதுடன் , அவுஸ்திரேலிய அணியை தமது 3ஆவது போட்டியில் வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியது இந்திய அணி.

மேலும் சுப்பர் 8 சுற்றின் குழு 2இற்கான போட்டிகளில் இங்கிலாந்து , மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை மிகுந்த போராட்டத்தின் பின்னர் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி மொத்தமாக 6 புள்ளிகளுடன் குழு 2இல் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் குழு 1இல் இரண்டாம் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடிய தென்னாபிரிக்கா அணி தமது மிரட்டல் பந்துவீச்சினால் வெறும் 56 ஓட்டங்களுக்குள் ஆப்கானை சுருட்டி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்த தென்னாபிரிக்கா அணி ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி அசத்தியது.

மேலும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சுப்பர் 8 சுற்றின் குழு 1இல் முதலிடம் பிடித்த இந்திய அணி குழு 2இல் 2ஆம் இடம்பிடித்த நப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்தாடியிருந்தது. இதில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டமும், குல்தீப் மற்றும் அக்ஷர் ஆகியோரின் சுழலும் கைகொடுக்க 68 ஓட்டங்களால் றெ;றி கொண்ட இந்திய அணி 10 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் குயிண்டன் டி கொக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் முதல் விக்கெட்டில் சிறந்த தொடக்கம் ஒன்றை கொடுக்க முயற்சி செய்தால் அவ்வணியால் இந்தியப் பந்துவீச்சை சமாளிக்க முடியும். மாறாக இத் தொடர் முழுக்க சீறாக பிரகாசிக்காத எய்டன் மார்க்ரம் ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோர் இறுதிப் பேபட்டியிலாவது கைகொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் ஒரு சில போட்டிகளில் பிரகாசித்துள்ள அதிரடி வீரர்களான டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டினால் மாத்திரமே தென்னாபிரிக்கா அணியால் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும்.

மேலும் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இந்த உலகக்கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்க அணியின் பலமாக இதுவே பார்க்கப்படுகின்றது. பந்துவீச்சிலே இவ்வணி எந்த வித தோல்விகளையும் சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை நுழைந்துள்ளது என்பது உண்மை. இவர்களில் பலமிக்க வேகப்பந்துவீச்சு வரிசையில் அன்ரிச் நோர்க்கியா, காகிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோரும், சுழல்பந்துவீச்சில் தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோரும் எதிரனியை துவம்சம் செய்திருக்க இவர்கள் நிச்சயம் இந்தியாவின் பலமிக்க துடுப்பாட்ட வரிசையை திணறடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதே போல் இந்திய அணியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவரான ரோஹித் சர்மாவின் அதிரடி அணியின் வேகமான ஓட்டக் குவிப்புக்கு துணை நிற்கின்றது. இருப்பினும் மற்றைய ஆரம்ப வீரரான விராட் கோஹ்லி இத் தொடர் முழுவதும் சிறப்பாகப் பிரகாசிக்கத் தறியுள்ளமை இந்திய அணிக்கு ஓட்டக் குவிப்பில் பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் ரிஷப் பாண்ட் , சூரியகுமார் யாதவ், ஹார்த்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டம் இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் பலமாகும். இருப்பினும் மத்திய வரிசையில் வரும் சிவம் டுபே பிரகாசிக்கத் தறியமை அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பந்துவீச்சில் இந்திய அணியின் வெற்றியில் முழுப் பங்கும் ஜெஸ்பிரிட் பும்ராவையே சார்ந்துள்ளது. எதிரணிக்கு மிகக் குறைந்த ஓட்டங்களை விட்டுக் கொடுத்து , மிக முக்கியமான எதிரணித் துடுப்பாட்ட வீரர்களை பெவிலியன் திரும்பும் பணியை பும்ரா மிகக் கட்சிதமாகச் செய்து வருகின்றார். இவரை தென்னாபிரிக்க அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதுதான் அவ்வணிக்குப் பெரும் சாவாலாக இருக்கப் போகிறது.

மேலும் சுழற்பந்துவீச்சில் மூவரும் இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர்களே உள்ளனர். இவர்களில் ஜடேஜா ஓரளவிற்கு பிராகாசித்த போதிலும் அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் சுமார் 5 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இதனால் எதிரணியால் மத்திய ஓவர்களில் எதிர்பாத்த ஓட்டங்களைப் பெற முடியாமல் போகின்றது.

எனவே சம பந்துவீச்சுப் பலங்களைக் கொண்ட இரு அணிகள் இன்றைய தினம் இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தள்ளன. இதில் இந்திய அணி வெற்றி கொண்டால் அவ்வணிக்கு 2ஆவது ரி20 உலகக்கிண்ணமாகும். மாறாக தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றார் அதுவே அவர்களுக்கு முதல் உலகக்கிண்ணம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *