உள்நாடு

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க கடன் கொடுத்த தரப்பினரையே ஒப்புக்கொள்ளச் செய்திருப்பது, நமது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பெருமிதம்

நாட்டின் கடனை மறுசீரமைக்க, கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம், எமது நாடு பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறியது உறுதியாகியுள்ளது என, அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் உடுகம்பளையிலுள்ள அவரது அலுவலகத்தில், (27) வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, “வெளிநாட்டுக் கடனை மறு சீரமைப்பதற்கு, கடன் வழங்கிய தரப்பினரையே இணங்கச் செய்தமை, எமது நாட்டின் மிகப் பெரிய சாதனையாகும். இதன்படி, தற்போது மீண்டும் சர்வதேச சந்தையில் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கேற்ப, இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன், புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த அலைகளை முன்னெடுத்து வருகின்றன. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே, பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வேலை நிறுத்தம் செய்து வரும் ஒரு கும்பல், ஆட்சி அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்படிப்பட்டவர்களிடமிருந்து நல்ல எதிர்காலத்தை மக்கள் எதிர்பார்க்க முடியாது.

அரச சம்பளத்தை தற்போதே அதிகரிக்க முடியாது. 2024 வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், அடுத்த வருடம் (2025) முதல் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக, ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அவ்வாறு கூறினாலும், அவர்கள் அதே இறைச்சியை இறாத்தலையே கேட்கின்றனர்.

கடனை மறுசீரமைக்க, கடன் வழங்குபவர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது ஒரு நாடாக எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வோம் என்பதை, இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம், நாம் இப்போது வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்தும் திறன் கொண்ட நாடாக இருப்பதை, கடன் வழங்குநர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

நாடு வங்குரோத்து ஆனதாக அறிவித்த பிறகு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அரசாங்கம் மீண்டும் நிறைய நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டுக் கடனை மறு சீரமைக்க கடன் கொடுத்த தரப்பினரை ஒப்புக்கொள்ளச் செய்ததே, நமது நாட்டின் மிகப் பெரிய சாதனையாகும். அதற்காக, இரண்டு வருடங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. “கொவிட்” தொற்று நோய் நிலைமை மற்றும் “அரகல” போராட்டத்தால், நமது பொருளாதாரம் சரிந்தது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. எனவே, கடந்த காலத்தில் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம். அந்த சிரமங்களை, மக்கள் மிகுந்த நிதானத்துடன் பொறுத்துக் கொண்டனர். இதன் விளைவாக, அரசாங்கம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணி கையிருப்பைக் குவிக்க முடிந்தது.

இப்போது மீண்டும் தேவைக்கு ஏற்ப சர்வதேச கடன்களைப் பெற முடிகிறது. இதன்படி, இதுவரை நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும், புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதாரச் சீர்திருத்த வேலைத்திட்டம் காரணமாக, நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த இந்த விரைவான வெற்றிகளை, எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் எப்பொழுதும் இந்த நாட்டில் பாசாங்குத்தனம் மற்றும் பொறாமையின் அடிப்படையிலேயே அரசியல் செய்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில், அவர்கள் வேலை நிறுத்தம் செய்து நாட்டின் அனைத்து குடிமக்களையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

இந்த வேலை நிறுத்த மாஃபியாவால், நாட்டின் முன்னேற்றத்தை மாற்ற முடியாது. சந்திகளில் கூட்டங்களை நடத்தி, மக்களுக்குப் பொய்யான வீண் பேச்சுக்களை விட்டுச் செல்லும் எதிர்க்கட்சிகளுக்கு, பொருளாதார தீர்வே இல்லை. அந்தத் தோல்வியினால் தான் நாங்கள் கோரிக்கை விடுத்தாலும், எதிர்க்கட்சிகள் நாட்டைப் பொறுப்பேற்க முன் வரவில்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்த தருணத்திலிருந்து, எதிர்க்கட்சிகள் வன்முறைகளை விதைத்து வேலை நிறுத்தங்களை ஆரம்பித்து வருகின்றன.

இந்த விளையாட்டை அவர்கள் இப்போது நிறுத்த வேண்டும். இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில் நாட்டுக்கே சாபக்கேடு. நாட்டுக்கு சாபமாக மாறியுள்ள இந்த எதிர்க்கட்சிகள் குறித்து, எதிர்வரும் தேர்தலில் மக்கள் இறுதியும் உறுதியுமான தீர்மானங்களை எடுப்பார்கள் என விசுவாசமாக நம்புகின்றேன் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *