உள்நாடு

புத்தளத்தில் எல்லை மீறும் காட்டு யானைகள்

காட்டு யானைகளின் தாக்குதலால் புத்தளம் – மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அருகில் உள்ள சந்தையையும், கடையொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (28) அதிகாலை காட்டு யானையொன்று மஹாகும்புக்கடவல பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததாகவும், அங்கு சில கடைகளை தாக்கிய போது, பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அது மீண்டும் வருகை தந்து சேதப்படுத்தியதாகவும் உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம் ஒன்றையும் தாக்கிய காட்டு யானை, ஆனமடுவ பிரதேச சபைக்கு சொந்தமான தனியாருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட கடையொன்றையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, ஆனமடுவ, மஹாகும்புக்கடவல உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி நுழையும் காட்டு யானைகள் விவசாய நிலங்கள், பாடசாலை கட்டிடங்கள், வீடுகள் மற்றும் பயன்தரும் மரங்கள் என்பனவற்றையும் சேதப்படுத்தி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், மக்கள் வாழும் கிராமங்களுக்குள்ளும் குறித்த காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு வெளியேறும் யானைக்கூட்டங்கள் வல்பாலுவ தேக்குமர காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தங்கி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகளை வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. எனினும், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


(ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ. காசிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *