நாட்டிலும்,சமூகத்திலும் கல்விப் புரட்சி மூலம் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்; தர்காநகர் நிகழ்வில் அமைச்சர் அலி சப்ரி
கல்விப் புரட்சி மூலமே நாட்டிலும் சமூகத்திலும் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தர்கா நகரில் தெரிவித்தார்.
இலங்கையில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலய 125வது வருட பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை வரலாறு தொடர்பான தகவல்கள் அடங்கிய அல் ஹம்ரா ஒளிக்கீற்று வீடியோ “Revisiting our roots 125 Anniversary Documentary Screening” AL-HAMRA RAY OF LIGHT” வெளியீட்டு விழா (29-6-2024) பாடசாலை மண்டபத்தில் அதிபர் பஸ்லியா பாஸி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல்,ரூமி ஹாஷிம் கல்வி நிலைய ஸ்தாபகர் டாக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோர் விழாவில் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அலி ஸப்ரி ஸ்மார்ட் வகுப்பறை ஆரம்பிக்க ஆவணத்தை அதிபரிடம் கையளித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் இரண்டு மில்லியன் ரூபாவை யும்,டாக்டர் ரூமி ஹாஷிம் 5 லட்சம் ரூபாவையும் இதன் போது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம்.நயீம்,125வது வருட நிகழ்வின் செயலாளர் டாக்டர் எம்.எச்.எம்.இஹ்ஸான்,ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் செயலாளர் ஜெஸூக் அஹமத்,இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவர் ஏ.பி.எம்.ஸுஹைர் ஹாஜியார், பேருவளை பிராந்தி எழுத்தாளர் சங்க தலைவர் ரபீஸ் ஹம்ஸா,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பைஸான் பைஸர்,ஹசீப் மரிக்க உட்பட ஊர் பிரமுகர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பல பாடசாலைகளின் முன்னால் அதிபர்கள் என பெருமளவிலானோர் நிகழ்வில் பங்குபற்றினர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது கூடுதலான நேரத்தை கல்விக்காக செலவிட்டு தலைசிறந்த புத்திஜீவிகளை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். கல்வியின் மூலமே சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம்.
தர்கா நகர் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் சமூகத்திற்கும்,நாட்டிற்கும் சிறந்த அறிவாளிகளை உருவாக்கிய பாடசாலை ஆகும். இப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு என்னால் முடியுமான உதவிகளை செய்வேன். அனைவரும் ஒன்றுபட்டு பாடசாலையை மேலும் கட்டியெழுப்ப உழைக்க வேண்டும்.
களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கும்,முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கும் 300 மில்லியன் செலவில் புதிய கட்டிடங்களை அமைக்க உள்ளேன். கல்விக்காக 100 மில்லியனை செலவு செய்ய உள்ளேன்.
கொழும்பு மத்தியில் அங்க சம்பூரண பாடசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். அரசாங்கம் கல்விக்காக கூடிய நிதியை வருடா வருடம் ஒதுக்கி வருகிறது. நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும் கல்வித்துறையை முன்னேற்ற உழைத்துள்ளது. நாட்டில் கல்விப் புரட்சியின் ஊடாகவே மறுமலர்ச்சியை தோற்றுவிக்க முடியும் நாடு சுதந்திரம் அடைந்த பின் கல்வியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது.
அல்-ஹமராவில் மீண்டும் சிங்கள மொழி பிரிவை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் இன நல்லுறவை கட்டியெழுப்ப வாய்ப்பு கிடைக்கிறது என்றார். அமைச்சர் அலி ஸப்ரி இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பிரிவு பாட துறையை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சருக்கு சிபார்சு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)