மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு!
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.
ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.
அதன் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஒரு நாளில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் அதாவது இன்னும் மூன்று வாரங்களின் பின் ஆயத்தப் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவித்ததாவது,”தேர்தல் கடமைகளுக்காக அரச ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோருமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம். வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் இடங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
இதேவேளை, வாக்காளர்களின் விரல் நகங்களில் அழியாத மை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த வகையான மை பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆணைக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.