விளையாட்டு

இங்கிலாந்தை சுழலில் சுருட்டிய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சுழலில் சுருட்டிய ரோஹித் தலைமையிலான இந்திய அணி 68 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்று 10 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இறுதிப் போட்டியில் நாளை தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலக்கிண்ணத் தொடர் இறுதித் தருவாயை அடைந்திருக்க முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி முதல் முறையாக ரி20 இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. இந்நிலையில் 2ஆவது அரையிறுதிப் போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டமையால் போட்டி 9.15 மணிக்குப் பின்னர் ஆரம்பித்திருந்தது.

போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய களம் நுழைந்த இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான ரோஹித் மற்றும் கோஹ்லி ஜோடி எதிர்பார்த்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை. கோஹ்லி 9 ஓட்டங்களுடன் போல்ட் ஆகி தொடர்ந்தும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்துவந்த ரிஷப் பாண்ட் 4 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் களத்திலிருந்த ரோஹித் 3ஆவது விக்கெட்டிற்காக சூரியகுமார் யாதவ் உடன் இணைந்து வேகமாக ஓட்டங்களைச் சேர்த்து அரைச்சதம் கடந்தார். இந்த ஜோடி 73 ஒட்டங்களை பகிர்ந்திருக்க ரோஹித் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த சூரியகுமார் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து வந்தவர்களில் ஹார்த்திக் பாண்டியா 23 ஓட்டங்களையும், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்தான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 172 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் வந்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரரான அணித்தலைவர் பட்லர் அதிரடி காட்டி 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து அக்ஷரின் சுழலில் சிக்கினார். பின்னர் சோல்ட் 5 ஓட்டங்களுடன் பும்ராவின் வேகத்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி (8)இ பெயஸ்ட்டோ (0) ஆகியோர் அக்ஷர் பட்டேலின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் குல்தீப் யாதவ் இங்கிலாந்து மத்திய வரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களை nளியேற்ற ஹரி ப்ரூக் 25 ஓட்டங்களையும், ஆச்சர் 21 ஓட்டங்களையும் அதிகமாகப் பெற்றுக் கொடுக்க இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 68 ஓட்டங்களால் தோற்றுப் போக இந்திய அணி 10 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதற்கமைய இப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நாளை இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இவ்pரு அணிகளும் இத் தொடரில் எந்த வித தோல்விகளையும் சந்திக்காத அணியாக இறுதிப் போட்டி வவரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *