விளையாட்டு

ஆப்கானை சல்லடையாக்கிய தென்னாபிரிக்கா முதல் முறையாய் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சம்ஷி, ஜென்ஸன் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சல்லடையாக்கப்பட 9 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்த 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் லீக் சுற்றுக்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்க தீர்மானமிக்க அரையிறுதி ஆட்டங்களும், இறுதி ஆட்டமும் மீதமுள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் முறையாகத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளும், 2ஆவது அரையிறுதியின் முன்னாள் சம்பியனான இந்திய அணியும், நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன.

அந்தவகையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு ட்ரெடினாட்டிலுள்ள பிரைன் லாரா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆரம்பித்திருந்தது. இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது.

இதற்கமைய களம் நுழைந்த அணியின் நட்சத்திர ஆரம்ப வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் ஆகியோர் எதிர்பார்த்த ஆரம்பத்தினை கொடுக்கவில்லை. குர்பாஸ் (0), குல்படின் நைப் (9) , இப்ராஹிம் சத்ரான் (2) என கேமாக நடையைக் கட்டினர். மத்திய வரிசை வீரர்களாவது கௌரவமான இலக்கினை நோக்கி அணியை அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அஸ்மதுல்லா ஒமர்ஷாய் மாத்திரம் இரட்டை இலக்கமான 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருக்க ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ் வெறும் 11.5 ஓவர்கள் வெறுமனே 56 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் நிறைக்கு வந்தது. பந்துவீச்சில் சம்ஷி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜெமிஸன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் அள்ளிச் சுருட்டினர்.

பின்னர் மிக மிக இலகுவான 57 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீரரான டி கொக் 5 ஓட்டங்களுடன் பரூக்கியின் வேகத்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இருப்பினும் 2ஆவது விக்கெட்டில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரீசா ஹெண்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் ஜோடி முறையே 29 மற்றும் 23 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொள்ள 8.5 ஓர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும் முதன் முறையாக உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தென்னாபிரிக்க அணி தகுதி பெற்று அசத்தியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *