உலகம்

குவைத் நாட்டுக்கு அதிக இரத்த தானம் செய்த நாடுகளுள் ஒன்றாக குவைத் வாழ் இலங்கையர்களை கௌரவித்த குவைத் அரசு..!

உலக சுகாதார அமைப்பினால் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. குவைத் மத்திய இரத்த வங்கி ஒவ்வொரு ஆண்டும் அதிக இரத்த தானம் செய்யும் சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் பாராட்டி கௌரவிக்கிறது.

2023-2024 ஆம் ஆண்டில் குவைத் மத்திய இரத்த வங்கிக்கு அதிக இரத்த தானம் செய்த இலங்கை அமைப்புக்களான:

*இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait )
*குவைத் அவசர உதவி மையம் (KEHS)
*குவைத் வெளிநாட்டு தொழிலார்கள் ஒன்றியம் (KUCH)
*செலானீஸ் உதவும் கரங்கள் குவைத் (SHHK)

ஆகிய குவைத் வாழ் இலங்கை சங்கங்களை பாராட்டி கௌரவித்தது இது மூன்றாவது தடவையாகும்.

24.06.2024 தினம் Holiday Inn, குவைத் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத் நாட்டின் கௌரவ. சுகாதார அமைச்சர் திரு. அஹ்மத் அப்துல் வஹாப் அல்-அவதி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுக்கு குவைத் அரச உயர் அதிகாரிகள், சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், குவைத் மத்திய இரத்த வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர் . மாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் எமது இலங்கை சங்கங்களுக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இலங்கையர்களின் தொடரான இரத்த தான சேவையையும் பாராட்டினார்கள்.

இந்த இரத்த தான நிகழ்வுகள் குவைத் நாட்டுக்கு நன்றி செலுத்தும் செயலாகவும், பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் மனிதாபிமான நடவடிக்கையாகவும் இருந்து வருகிறது. குவைத்தில் பணி புரியும் இலங்கையர்கள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக இரத்ததானம் செய்து வருகின்றனர். எங்களின் அழைப்பை ஏற்று இரத்ததானம் செய்ய பங்களித்த குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொண்டுக்கு பங்களித்த நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வாழ வாழ்த்துகிறோம்.

இனிமேலும் இணைந்து செயல்படுவோம், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற செயற்பாடுகளில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

(குவைத் வாழ் இலங்கையர்கள்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *